ஸ்டார்மரின் மிரட்டலுக்கு அஞ்சாமல்... பிரித்தானியாவையைக் கடந்த 100 ரஷ்யக் கப்பல்கள்
ரஷ்யாவிற்காக செயல்படும் தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடந்த மாதம் கடும் மிரட்டல் விடுத்திருந்தும், குறிப்பாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யக் கப்பல்கள்
ஸ்டார்மரின் மார்ச் 25 அச்சுறுத்தலுக்குப் பிந்தைய மாதத்தில், பிரித்தானியாவின் தடைகளுக்கு உட்பட்ட குறைந்தது 98 ரஷ்யக் கப்பல்கள் நாட்டின் கடல்வழியைக் கடந்து சென்றுள்ளன.

மட்டுமின்றி, கடந்த மூன்று மாதங்களிலும், இதே எண்ணிக்கையில் ரஷ்யக் கப்பல்கள் கடந்துள்ளன. இந்தக் கப்பல்களைக் கைப்பற்றியதாகவோ, அல்லது கடற்படை முற்றுகையிட்டதாகவோ இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இதுபோன்ற கப்பல்களில் பொதுவாக எண்ணெய், தானியங்கள் மற்றும் ஆயுதங்கள் கொண்டுசெல்லப்படுகிறது. இதனூடாக, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா நிதி திரட்டுகிறது.
வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், ஆங்கிலக் கால்வாயில், கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் தொலைவிற்குள் 63 கப்பல்கள் கடந்து சென்றுள்ளன. இது பால்டிக் கடலுக்கும் தெற்கு ஐரோப்பாவிற்கும் இடையிலான மிகவும் நேரடியான பாதையாகும்.
இன்னொரு 35 கப்பல்கள், முக்கியமாக வடக்கு ஸ்காட்லாந்தைச் சுற்றி, கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தின் வழியாகப் பயணித்துள்ளன.

விரோத நடவடிக்கை
ஆனால், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் சுவீடன் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகள், சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவின் இந்த வகை கப்பல்களைச் சோதனையிட்டுத் தடுத்து வைத்துள்ளன.
ரஷ்யாவிற்காக செயல்படும் இதுபோன்ற கப்பல்களில் 544 எண்ணிக்கையை பிரித்தானியா தடை செய்யப்பட்ட கப்பல்கள் பட்டியலில் வைத்துள்ளது.

பிரித்தானியாவின் கடல் எல்லையைக் கடக்கும்போது, அவ்வழியாகச் சென்ற குறைந்தது 10 கப்பல்கள், தங்கள் கண்காணிப்பு அமைப்புகளை அணைப்பது அல்லது கையாளுவது போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், தங்களது கப்பல்களுக்கு எதிரான தடைகள் சட்டவிரோதமானவை என்றும், பிரித்தானியாவின் சமீபத்திய கொள்கை பதிலடியைத் தூண்டக்கூடிய தீவிர விரோத நடவடிக்கை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |