வெள்ளைக் கொடியுடன் இராணுவ டாங்கியில் வந்த ரஷ்ய வீரர்: பின்னர் நடந்த அதிரடி திருப்பம்
ரஷ்ய தளபதியின் கொலை மிரட்டலுக்கு பயந்து, இராணுவ டாங்கியுடன் சரணடைந்த வீரருக்கு குடியுரிமை வழங்கி உக்ரைன் அரசாங்கம் காப்பாற்றியுள்ளது.
மட்டுமின்றி குறித்த ரஷ்ய வீரருக்கு 7,500 பவுண்டுகள் உதவித்தொகையும் உக்ரைன் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. மிஷா என மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அந்த ரஷ்ய வீரர் வெள்ளைக் கொடியுடன் கெஞ்சியபடி, தமக்கு உக்ரைனில் அடைக்கலம் வழங்கும்படி அதிகாரிகளை அணுகியுள்ளார்.
மட்டுமின்றி, அவருடன் களமிறங்கிய சக வீரர்கள் உயிர் பயத்தில் தப்பிச் சென்றதாகவும், போரிட மறுத்தால் கொலை செய்துவிடுவதாக தங்களது தளபதி மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் இனிமேலும் போரிடுவதில் அர்த்தமில்லை என தாம் கருதுவதாகவும் மிஷா தெரிவித்துள்ளார். அத்துடன், ஊருக்கு திரும்பினால் கண்டிப்பாக தாம் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அஞ்சுவதாகவும் மிஷா குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, உக்ரைன் அதிகாரிகளை தொடர்பு கொண்ட மிஷா, தமது நிலை குறித்து விளக்கி தஞ்சம் கோரியுள்ளார். தொடர்ந்து ரஷ்ய இராணுவ டாங்கியில் வெள்ளைக் கொடியுடன் உக்ரைன் ராணுவத்தினரை குறிப்பிட்ட பகுதியில் சந்தித்துள்ளார் மிஷா.
உக்ரைன் இராணுவ அதிகாரிகளின் ஒப்புதலுடன், மிஷாவுக்கு உக்ரைன் குடியுரிமையும், ஊக்கத் தொகையும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இராணுவ வீரர் ஒருவர் போருக்கு வந்த நிலையில், உக்ரைன் குடியுரிமையும் ஊக்கத் தொகையும் பெற்றுள்ளார் என்பது கண்டிப்பாக ரஷ்யாவுக்கு பின்னடைவாக அமையும் என்றே கூறப்படுகிறது.