போரில் சக வீரர்கள் பலரை இழந்ததால் கோபத்தில் தன் படைத்தலைவர் மீதே டாங்கை ஏற்றிய ரஷ்ய வீரர்
உக்ரைன் போரில் ரஷ்ய தரப்பில் ஏற்பட்டுள்ள பெரும் இழப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, தனது படைத்தலைவர் மீதே டாங்க் ஒன்றை ஏற்றியுள்ளார் கோபமுற்ற ரஷ்ய வீரர் ஒருவர்.
உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள 1,500 படைவீரர்களைக் கொண்ட ரஷ்ய டாங்க் படைப்பிரிவில், கிட்டத்தட்ட பாதிபேர் ஒன்றில் இறந்துவிட்டார்கள் அல்லது காயமடைந்துள்ளார்களாம்.
ஆகவே, கோபத்தில் இருந்த அந்த படைப்பிரிவைச் சேர்ந்த படை வீரர் ஒருவர், சரியான சந்தர்ப்பம் பார்த்து தன் படைத்தலைவரான கர்னல் Yuri Medvedev என்பவர் மீது டாங்கை ஏற்றிவிட்டதாக, உக்ரைன் ஊடகவியலாளரான Roman Tsymbaliuk என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியில் எந்த அளவுக்கு நம்பகத் தன்மை உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், அதற்கு ஆதாரமாக, கால்களில் பலத்த காயமடைந்த கர்னல் Medvedev, ஸ்ட்ரெச்சர் ஒன்றில் வைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கர்னல் Medvedev மீது டாங்கை ஏற்றிய வீரர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. ஆனால், Medvedev பெலாரஸிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரஷ்யாவின் வீர விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் Tsymbaliuk தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உக்ரைன் போரில் இதுவரை 7,000 முதல் 15,000 ரஷ்ய படைவீரர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.