கடும் குளிரில் ஆடை இல்லாமல் தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை: கதறும் ரஷ்ய வீரர்கள்
இராணுவத்தில் இருந்து விலகவும், உத்தரவுகளைப் பின்பற்றத் தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய வீரர்களுக்கு விளாடிமிர் புடினின் தளபதிகள் வழங்கும் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதை தண்டனைகள் காணொளிகளாக வெளியாகியுள்ளது.
கதறும் காட்சிகள்
போர் நடக்கும் பகுதிக்கு அருகில், கடுங்குளிரில் ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டப்பட்ட நிலையில் ஒரு இராணுவ வீரர் கதறும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

இன்னொருவர் தலைகீழாக தொங்கவிடப்பட்ட நிலையில், தனது உயர் அதிகாரியால் பனிக்கட்டியை உண்ணும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
குளிர்காலத்திற்கான அவர்களின் சீருடைகள் அகற்றப்பட்ட நிலையில், பயந்து நடுங்கிக்கொண்டிருந்த அந்த வீரர்கள் உள்ளாடைகளை மட்டுமே அணிந்திருந்தனர்.
ஆடைகள் இல்லாமல் அந்தக் கடும் குளிரில் மரத்துடன் கட்டப்பட்ட வீரர்களில் ஒருவர், மன்னித்துவிடுங்கள், இதுபோன்று மீண்டும் நடக்காது என விரக்தியுடன் கெஞ்சுகிறார். ஆனால், புடினின் அதிகாரிகள் அவர்களின் கெஞ்சல்களை கேலி செய்வதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.
உக்ரைன் மீதான தனது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால படையெடுப்பை நிறுத்த புடினிடமிருந்து உறுதியான பதில் எதுவும் வெளிவராத நிலையில், போர் தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போது இந்த குலைநடுங்க வைக்கும் சித்திரவதை காணொளிகள் வெளியாகியுள்ளது.
கொடூரமான தாக்குதல்
ரஷ்யா மக்களைக் கால்நடைகளாக மட்டுமே கருதுகிறது, ஏனென்றால் விலங்குகள் மட்டுமே ஒரு வார்த்தையும் பேசாமல் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்றன என உக்ரைன் செய்தி ஊடகம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய கொடூரமான தாக்குதல்களால் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் 80 சதவீதம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை -18C என பதிவாகியுள்ள இப்பகுதிகளில், சுமார் 24 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கார்கிவ் ஆளுநர் ஓலே சினியேஹுபோவ் கூறுகையில், எங்கள் எரிசக்தி அமைப்பு தாக்குதலுக்கு உள்ளானது, கணிசமான சேதம் ஏற்பட்டது என்றார்.
கார்கிவ் நகரத்திலும் கார்கிவ் பிராந்தியத்திலும் சுமார் 80 சதவீதம் பகுதி மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசாவில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களில் 22 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |