உக்ரைனை ஊடுருவிய ரஷ்ய வீரர்கள் இவர்கள் தான்: மொத்த தனிப்பட்ட தகவல்கள் அம்பலம்
உக்ரைன் படையெடுப்பில் ரஷ்யாவால் களமிறக்கிய 120,000 வீரர்களின் தனிப்பட்ட தகவல்கள் மொத்தமும் ஹேக்கர் குழு ஒன்றால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்த நாள் முதல், தாங்கள் குறித்த வீரர்களின் தகவல்களை திரட்டி வந்துள்ளதாக ஹேக்கர் குழு அறிவித்துள்ளது.
மேலும், வெளியிடப்பட்ட தரவுகளில் ரஷ்ய வீரர்களின் பெயர், பிறந்த திகதி, குடியிருப்பு விலாசம் மற்றும் கடவுச்சீட்டு இலக்கம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கியுள்ளது.
உக்ரைன் போரில் பங்கேற்ற அனைத்து ரஷ்ய வீரர்களும் போர் குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதும் அதன் மக்கள் மீதும் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலானது இன அழிப்பு என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பகிரங்கமாக குறிப்பிட்ட நிலையிலேயே, ரஷ்ய துருப்புகள் மீது போர் குற்ற நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், போர் தொடங்கிய நாள் முதலான புகைப்படங்கள் மற்றும் காணொளிப் பதிவுகளுடன் செய்தி ஒன்றை ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில், உங்கள் ஆட்சி மனித உரிமைகளுக்கு அல்லது உங்கள் அண்டை நாடுகளின் சுயநிர்ணய உரிமைக்கு மரியாதை செலுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ள உங்கள் ஆட்சிக்கு எதிரான இணைய யுத்தம் துவங்கியுள்ளது எனவும், மிக விரைவில் உலக நாடுகளில் உள்ள ஹேக்கர்களின் கோபத்தை உணர்வீர்கள் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.