சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயம்? உலகநாடுகளை எச்சரிக்கும் ரஷ்யா
ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் பொருளாதார தடைகளால் சர்வேதேச விண்வெளி ஆய்வு மையத்தின் உடன்பாட்டில் சிக்கலை ஏற்படுத்தும் என ரஷ்ய விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் நிர்வாக இயக்குனர் டிமிட்ரி ரோகோசின் (Dmitry Rogozin) எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய 3வது நாளாக இன்று போர் தொடுத்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற மேற்குநாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த பொருளாதார தடைகள் மூலம் சர்வேதேச விண்வெளி நிலையத்தின் ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்படலாம் ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் நிர்வாக இயக்குனர் டிமிட்ரி ரோகோசின் (Dmitry Rogozin) எச்சரித்துள்ளார்.
உலகநாடுகள் எங்கள் நாட்டுடன் உறவு மற்றும் ஒத்துழைப்பை நிறுத்தினால், சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனவும், கட்டுப்படுத்த முடியாத விண்வெளி சுற்றுப்பாதைக்குள் சர்வதேச விண்வெளி நிலையம் நுழைந்து, அது அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ விழும் என ரோகோசின் எச்சரித்துள்ளார்.
மேலும் 500 டன் எடைகொண்ட இந்த விண்வெளி நிலையம் இந்தியாவிலோ அல்லது சீனாவிலோ கூட விழுவதற்கான அதிகமான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உங்களின் இந்த தடைகள் மூலம் சர்வதேச விண்வெளி நிலையம் ரஷ்ய வான்வெளி பரப்பிற்குள் பறக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் இத்தகைய போராட்டங்கள் வேண்டுமா? அதற்கு நீங்கள் தயாரா? என கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இந்தநிலையில் நாசா செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில், விண்வெளி செயல்பாடுகளை பொறுத்தவரை தற்போது ரஷ்ய விண்வெளி மையம் "ரோஸ்கோஸ்மோஸ்" உட்பட அனைத்து சர்வதேச நாடுகளுடன் இணைந்தே செயல்படுவதாகவும், புதிய ஏற்றுமதி கட்டுப்பாடு நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் அமெரிக்க-ரஷ்ய சிவில் விண்வெளி ஒத்துழைப்புக்கு அனுமதியளிக்கும் என தெரிவித்துள்ளார்.
உலகத்தில் மிகப்பெரிய வான்பரப்பை கொண்டுள்ள ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் தற்போது சர்வதேச விண்வெளி நிலையம் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு அனைத்து நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இந்த சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்காவை சேர்ந்த 4 விண்வெளி வீரர்களும், ரஷ்யாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்களும், ஐரோப்பாவை சேர்ந்த 1 விண்வெளி வீரரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.