பின்வாங்கிய ரஷ்ய படைகளின் தந்திரம்...கண்ணி வெடிகளால் கதிகலங்கி நிற்கும் உக்ரைன்!
உக்ரைனின் முக்கிய நகரங்களில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள் அந்த பகுதிகளில் கண்ணி பொறிகளை மறைத்து வைத்து பொதுமக்களை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படைகள் வெளியேறிய பிறகு அதன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் உள்ள கார்கள், இறந்த உடல்கள், வீட்டு உபயோக பொருள்களான சலவை இயந்திரங்கள் மற்றும் வீட்டு கதவுகள் என அனைத்திலும் கண்ணி பொறிகளை மறைத்து வைத்து உக்ரைனிய குடிமக்களை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக உக்ரைனிய வெளியுறவு துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் ரஷ்ய படைகளின் இத்தைகைய செயல்கள் உக்ரைனிய ராணுவ படைகளை மட்டும் குறிவைப்பதாக தெரியவில்லை மாறாக அப்பாவி பொதுமக்களை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
கண்ணி வெடிகளை மறைத்து வைப்பது சர்வதேச விதிமுறைகளின் படி தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் மனிதாபிமான அத்துமீறல் எனவும் உக்ரைனிய வெளியுறவு துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
கார்கள், சாலைகள், தனியார் கட்டிடங்கள் ஆகியவற்றில் கண்ணி வெடி பொருத்தப்பட்டு இருப்பது தொடர்பான புகைப்படங்களை ஆயுத ஆய்வாளர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்தநிலையில், உக்ரைனின் கார்க்கிவ் நகரில் ரஷ்ய துருப்புகள் கண்ணி வெடிகளை பொருத்தி இருப்பதை மனித உரிமை கண்காணிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதனடிப்படையில், உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 54,000 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.