ஐநாவுக்கான 12 ரஷ்ய தூதர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற உத்தரவு!
அமெரிக்காவை உளவு பார்த்ததாக கூறி, ரஷ்யாவின் ஐ.நா சபை தூதுக்குழு உறுப்பினர்கள் 12 பேரை அமெரிக்காவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் பதற்றம் நிலவிவரும் சூழலில் நேற்று நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் இந்த அறிவிப்பை அமெரிக்காவின் ஐநா சபை செய்தித்தொடர்பாளர் ஒலிவியா டால்டன் தெரிவித்துள்ளார்.
அதில் அமெரிக்காவில் வசிக்கும் ரஷ்யாவின் ஐநா சபை தூதுக்குழு ராஜதந்திர உறுப்பினர்கள் சிலர் தங்களின் சிறப்புரிமைகளை துஷ்ப்பிரயோகம் செய்து அமெரிக்காவை உளவு பார்த்து வருவதால் நாட்டின் பாதுகாப்பு கருதி அவர்களை உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற உத்தரவு விடப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் இந்த நடவடிக்கை ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிப்பதற்கு முன்னர் பேசிய, அமெரிக்காவின் துணை தூதர் ரிச்சர்ட் மில்ஸ், உக்ரைன் மனிதாபிமான நடவடிக்கையில் ஐநா சபை ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அதற்கு மாறாக சிலர் ராஜதந்திரமற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
இந்த அறிவிப்பை முதலில் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய ஐநாவுக்கான ரஷ்யாவின் தூதர் வாசிலி நெபென்சியா, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள 12 அதிகாரிகளும் மார்ச் 7 திகதிக்குள் வெளியேறுவார்கள் என தெரிவித்தார்.