ரஷ்யாவின் கொடூர தளபதி என பெயெரெடுத்தவர்... பழி தீர்த்த உக்ரைன் இராணுவம்
உக்ரைன் மக்களுக்கு எதிராக கொடூர நடவடிக்கைகள் முன்னெடுத்து வந்த ரஷ்ய ஆதரவு முக்கிய படை தளபதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு துவங்கிய பின்னர் புடின் இராணுவம் இழக்கும் மூன்றாவது முக்கிய தளபதி இவர். உக்ரைனின் கிழக்கு நகரமான வோல்னோவாகாவில் சனிக்கிழமை நடந்த போரின் போது விளாடிமிர் ஜோகா கொல்லப்பட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் வீராவேச நடவடிக்கைகில் ஈடுபட்டு ரஷ்யாவின் முக்கிய தளபதிகள் தங்கள் உயிரை பறிக்கொடுப்பதாக இராணுவ வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
தளபதி ஜோகாவின் படுகொலை தொடர்பில் அவரது ஆதரவாளர்களே சமூக ஊடகங்களில் உறுதி செய்துள்ளனர். ரஷ்ய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து அப்பாவி பொதுமக்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையின் போது தளபதி ஜோகா படுகொலை செய்யப்பட்டார் என அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தளபதி ஜோகா ஸ்பார்டா பட்டாலியன் என்ற பிரிவுக்கு தலைமை தாங்கி வந்தார். கடந்த பல ஆண்டுகளாக உக்ரைன் அரசுக்கு எதிராக கடுமையாக போரிட்டு வந்தவர் ஜோகா. உக்ரைன் இராணுவத்தினரை சிறைப்பிடித்து சித்திரவதைக்கு உள்ளாக்குவதும், மிகக்கொடூரமாக அவர்களை படுகொலை செய்வதும் தளபதி ஜோகாவின் முக்கிய பொழுதுபோக்கு என கூறப்படுகிறது.
2015ல் 4 உக்ரைன் வீரர்களை சிறைபிடித்த இந்த குழுவினர், அப்போதைய தலைவர் Arsen Pavlov என்பவரால் கொடுமைப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததுடன், விவாதத்தையும் ஏற்படுத்தியது.
2016ல் Arsen Pavlov உக்ரைனிய ஆதரவாளர்களால் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட, ஸ்பார்டா பட்டாலியன் பிரிவுக்கு விளாடிமிர் ஜோகா பொறுப்பேற்றுக்கொண்டார். ரஷ்ய மக்கள் அதிகம் வாழும் உக்ரைன் நகரில் 1993ல் பிறந்த விளாடிமிர் ஜோகா 2014ல் ஸ்பார்டா பட்டாலியன் பிரிவில் இணைந்து செயல்பட முடிவு செய்தார்.
2016ல் முக்கிய தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டவர் தற்போது உக்ரைன் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 2014ல் உக்ரைன் நிர்வாகத்திற்கு எதிராக ஸ்பார்டா பட்டாலியன் முன்னெடுத்த மிகக் கொடூரமான தாக்குதலில் பத்திரிகையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், அப்பாவி மக்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.