ரஷ்ய போர்க்கப்பலை உக்ரைன் தாக்கி மூழ்கடித்ததாக கூறப்படும் காட்சி: வைரல் வீடியோவின் உண்மைப் பின்னணி
பிப்ரவரி 24ஆம் திகதி உக்ரைனை ரஷ்யா ஊடுருவியது முதலே, தனது இராணுவத்தில் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகிறது ரஷ்யா.
உதாரணமாக, ரஷ்யாவின் கௌரவம் என அழைக்கப்படும் மாஸ்க்வா கப்பலை உக்ரைன் படைவீரர்கள் தாக்கி மூழ்கடித்தது போன்ற விடயங்களைக் கூறலாம்.
ஆனால், அதையே காரணமாக வைத்து, உக்ரைன் ரஷ்யப் போர் வாகனங்களை தாக்கி அழிப்பதாகக் கூறப்படும் பல காட்சிகள் தொடர்ந்து இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்றை உக்ரைன் ஏவுகணை மூலம் தாக்கி அழிப்பதைக் காட்டுவதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
ஆனால், தற்போது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது ரஷ்யப் போர்க்கப்பலை உக்ரைன் அழிக்கும் காட்சி அல்ல என்பது தெரியவந்துள்ளது.
அது, பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றை மூழ்கடிக்கும் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்.
popularmechanics.com என்னும் இணையதளத்தில் இடம்பெற்றிருந்த கட்டுரை ஒன்றில் அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டு, அமெரிக்க கடற்படையும், அதன் கூட்டாளிகளும் பழைய போர்க்கப்பல் ஒன்றை மூழ்கடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டதாக அந்த கட்டுரை தெரிவித்திருந்தது.
அந்த கப்பலை மூழ்கடிக்க 12 மணி நேரம் ஆனது என Daily Mail பத்திரிகையும் தெரிவித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதே செய்தியை CNN முதலான பல்வேறு ஊடகங்கள் உறுதி செய்துள்ள நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சி, ரஷ்யப் போர்க்கப்பலை உக்ரைன் படையினர் தாக்கி அழிக்கும் காட்சி அல்ல என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.