ஜெலென்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தை நெருங்கிவிட்ட ரஷ்ய படையினர்!
ரஷ்ய துருப்புக்கள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பிடிக்க நெருங்கி வந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமீபத்தில் அளித்த பேட்டியில், உக்ரைன் போரின் தீவிரமான ஆரம்ப நாட்ககளின் போது, ரஷ்ய துருப்புக்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கைப்பற்றுவதற்கு மிக அருகில் வந்ததாகக் கூறினார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிப்ரவரி 24 அன்று படையெடுப்பை அறிவித்தார். அந்த நாளில் என்ன நடந்தது என்பதை ஒரு துண்டு துண்டாக இருக்கும் தனது நினைவுகளிலிருந்து ஜெலென்ஸ்கி நினைவு கூர்ந்தார்.
அதில் மிகவும் மறக்கமுடியாத தெளிவான நினைவுகளில் ஒன்று என்றால், அவரும் அவரது மனைவி ஓலேனா ஜெலென்ஸ்காவும் தங்கள் 17 வயது மகள் மற்றும் 9 வயது மகனை எழுப்பி குண்டுவெடிப்பு தொடங்கியதை அவர்களிடம் கூறியது தான் என்று கூறியுள்ளார்.
புடினுக்கு தான் தான் முக்கிய இலக்கு என்பதும், அன்று தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஜனாதிபதி அலுவலகம் பாதுகாப்பான இடம் அல்ல என்பது விரைவில் தெளிவாகத் தெரிந்தது என்றார். அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொல்ல அல்லது பிடிப்பதற்காக ரஷ்ய தாக்குதல் குழுவொன்று கீவ் நகருக்குள் பாராசூட் மூலம் நுழைந்ததாக தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
"அந்த இரவுக்கு முன், நாங்கள் திரைப்படங்களில் மட்டுமே இதுபோன்ற விடயங்களைப் பார்த்திருக்கிறோம்," என்று ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரியான Andriy Yermak, ஜனாதிபதி அலுவலக வளாகத்தை எவ்வாறு பாதுகாக்க முயன்றார் என்பதை விவரித்துள்ளார்.
ரஷ்ய தாக்குதலின் முதல் இரவில், விளக்குகள் அணைக்கப்பட்டு, வளாகத்திற்குள் இருந்த காவலர்கள் குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகளை ஜெலென்ஸ்கி மற்றும் அவரது உதவியாளர்களுக்கு கொண்டு வந்தனர்.
உக்ரைனின் இராணுவ புலனாய்வு சேவையின் மூத்த வீரரான Oleksiy Arestovych, ஜெலென்ஸ்கியின் மனைவி மற்றும் குழந்தைகள் அங்கு இருந்தபோது ரஷ்ய துருப்புக்கள் இரண்டு முறை வளாகத்தை தாக்க முயன்றதாக குறிப்பிட்டார்.
ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் தலைவர் தனது தைரியத்திற்காக உலகளவில் பாராட்டப்பட்டார். ஜெலென்ஸ்கி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அமெரிக்க வாய்ப்பை மறுத்து, பின் தனது நாட்டிலேயே தங்கி போராடுவதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில், இன்று 65-வது நாளாக தொடர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து பதிலடி கொடுத்து வருகிறது உக்ரைன்.