புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் திட்டம் ரத்து: 50 மில்லியன் இழப்பீடு கோரும் நாடு
கெய்ர் ஸ்டார்மர், பிரித்தானிய பிரதமரானதும், தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் ரிஷி சுனக் அரசின் திட்டத்தை ரத்து செய்தார்.
ஆனால், அந்த திட்டத்தை ரத்து செய்ததற்காக, ருவாண்டா தற்போது பிரித்தானியாவிடம் 50 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கோரியுள்ளது.
50 மில்லியன் இழப்பீடு
திடீரென இப்படி ஒரு பிரச்சினை எழக் காரணம் என்னவென்றால், ருவாண்டாவுக்கு வழங்கிவந்த நிதி உதவியை நிறுத்தப்போவதாக கடந்த வாரம் பிரித்தானியா அறிவித்தது.
அத்துடன், ருவாண்டா மீது தூதரக ரீதியிலான சில தடைகளை விதிக்க இருப்பதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அதற்குக் காரணம், ருவாண்டா, அருகிலுள்ள காங்கோ நாட்டில் செயல்படும் கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்றிற்கு ஆதரவளித்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆக, நிதி உதவியை நிறுத்தியதுடன், தங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்றிற்கு ஆதரவளித்துவருவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டதால் பிரித்தானியா மீது கோபமடைந்துள்ளது ருவாண்டா தரப்பு.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ருவாண்டாவுக்கு பணம் கிடைத்திருக்கும்.
ஆனால், புதிய அரசு அந்த திட்டத்தை ரத்து செய்து விட்டது. இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் பரஸ்பர நம்பிக்கையின் பேரில், பணம் பெரும் விடயத்தை அமைதியாக கைவிட்டுவிடுமாறு பிரித்தானியா ருவாண்டாவைக் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கிறார் ருவாண்டா அரசின் செய்தித்தொடர்பாளரான Yolande Makolo.
இருந்தும், எங்கள் நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் அநியாயமாக தண்டிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் பிரித்தானியா அந்த நம்பிக்கையை மீறிவிட்டது என்கிறார் அவர்.
ஆகவே, ஆப்பிரிக்காவுக்கான பிரித்தானிய அமைச்சரின் மோசமான கருத்துக்கள் உட்பட, பிரித்தானியா ருவாண்டாவுக்கெதிராக நடந்துகொள்ளும் விதமே, 50 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு தரவேண்டும் என பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலையை உருவாக்கியிருப்பதாக Makolo தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |