பல தம்பதிகளை கவலைக்குள்ளாகிய திருமண மண்டப மோசடி! தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் கைது
தென்னாப்பிரிக்காவில் திருமண மண்டப மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமண மண்டப மோசடி
தென்னாப்பிரிக்காவில் 53 வயதான இந்திய வம்சாவளி வழக்கறிஞர் ப்ரீலின் மோகன்லால்(Prelyn Mohanlall), 17 தம்பதிகளை திருமண மண்டபம் குறித்த வாக்குறுதி அளித்து பெருந்தொகை முன்கூட்டியே பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடியால், தென்னாப்பிரிக்காவின் பல்வேறு மாகாணங்களை சேர்ந்த தம்பதிகள், தங்கள் திருமண நாளில் மண்டபம் வெறுமையாகவும், மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் அவர்களின் திருமண கொண்டாட்டங்கள் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளன.
ப்ரீலின் மோகன்லால் கைது
வாடிக்கையாளர் நம்பிக்கை நிதியிலிருந்து பணத்தை திருடியதற்காக வழக்கறிஞர் பட்டம் பறிக்கப்பட்ட ப்ரீலின் மோகன்லால், ஒரு தம்பதியின் புகாரின் பேரில் தனியார் பாதுகாப்பு நிறுவனமான ரெக்ஷன் யூனிட் சவுத் ஆப்பிரிக்கா (RUSA) மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
RUSA நடத்திய விசாரணையில், பல தம்பதிகளை ப்ரீலின் மோகன்லால் இதேபோல் மோசடி செய்ததாக தெரியவந்துள்ளது.
கையும் களவுமாக பிடிபட்ட ப்ரீலின் மோகன்லால், தனது வணிகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டதும், கூட்டாளிகள் விலகியதும், திருமணங்கள் ரத்து செய்யப்பட்டதும் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 9 தம்பதிகளுக்கு தொகை கொடுக்க வேண்டியிருப்பதை ஒப்புக்கொண்ட அவர், அவர்களுக்கு பணத்தை திருப்பித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
ப்ரீயம் மோகன்லால் மீது போக்ஸ்பர்க் வடக்கில் உள்ள காவல் நிலையத்தில் கார் விற்பனை நிலையம் மற்றும் மற்றொரு தம்பதியை மோசடி செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |