என் தந்தைக்கு அளித்த வாக்குறுதியை இப்போதும் காப்பாற்றி வருகிறேன்: சச்சின் டெண்டுல்கர் உருக்கம்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், புகையிலை பொருட்கள் விளம்பரத்தில் நடிக்க மறுத்து, தனது தந்தைக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றி வருவதாக கூறியுள்ளார்.
விளம்பரத்தில் நடிக்க மறுப்பு
உலக புகையிலை எதிர்ப்பு தினமான இன்று புகையிலை பயன்பாட்டை குறைக்கவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
@youtube
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், மும்பையில் நடைபெற்ற நிகழ்வில், புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
@jiocinema
அந்நிகழ்வில் தனது வாழ்நாளில் இதுவரை எந்த புகையிலை பொருட்கள், விளம்பரத்திலும் நடித்ததில்லை என கூறிய அவர், ஒரு சுவாரஸ்யமான நிகழ்வொன்றை பகிர்ந்துள்ளார்.
தந்தைக்கு அளித்த வாக்குறுதி
இந்த நிகழ்வில் பேசிய அவர், தனது பாடசாலை படிப்பை முடித்து இந்திய அணியின் கிரிக்கெட் வீரராக அறிமுகமான சமயத்தில், புகையிலை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும், ஆனால் தான் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவரது தந்தையான ரமேஷ் டெண்டுல்கர் ’நீ நாளைய இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும், இது போன்ற புகையிலை பொருட்கள் விளம்பரத்தில் நடித்தால், அதனை பார்த்து உன் ரசிகர்கள் அதற்கு அடிமை ஆவார்கள். எனவே எப்போதும் புகையிலை விளம்பரங்களில் நடிக்க கூடாது’ என சச்சினிடம் கூறியுள்ளார்.
எனவே தந்தைக்கு அளித்த வாக்குறுதியை தான் தற்போது வரை காப்பாற்றி வருவதாகவும், பிரபல சிக்ரெட் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அதனை புறங்கணித்தாகவும் சச்சின் கூறியுள்ளார்.