செட்டிநாடு ஸ்டைல் சைவ நெத்திலி மீன் குழம்பு: எப்படி செய்வது?
வாழைப்பூ வைத்து செய்யப்படும் இந்த செட்டிநாடு சைவ நெத்திலி மீன் குழம்பு சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் அருமையான சேர்க்கையாக இருக்கும்.
சைவ பிரியர்களும் விரும்பி உண்ணும் செட்டிநாடு ஸ்பெஷல் சைவ நெத்திலி மீன் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வாழை பூ- 1 கைப்பிடி
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
- வெந்தயம்- ¼ ஸ்பூன்
- கொத்தமல்லி- 5 ஸ்பூன்
- சோம்பு- 2 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- வரமிளகாய்- 4
- சின்ன வெங்காயம்- 300g
- பூண்டு- 10 பல்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- தேங்காய்- 1
- தக்காளி- 250g
- எண்ணெய்- தேவையான அளவு
- கடலை மாவு- 100g
- அரிசி மாவு- 30g
- உப்பு- தேவையான அளவு
- கடுகு- 1 ஸ்பூன்
- பச்சைமிளகாய்- 4
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- மிளகாய் தூள்- 4 ஸ்பூன்
- மல்லி தூள்- 6 ஸ்பூன்
- புளி- எலுமிச்சை அளவு
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் வெந்தயம், கொத்தமல்லி, சோம்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து பொரிந்ததும் இதில் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இதில் பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி இதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்த தக்காளி சேர்த்து வதக்கி பின் இதனை நன்கு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு போல் கலந்துகொள்ளவும்.
இதனை தொடர்ந்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி எடுத்துவைத்துள்ள வாழைப்பூவை கரைத்த மாவில் நனைத்து எண்ணெயில் பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து குழம்பு செய்ய ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து அதில் வெந்தயம், கடுகு சேர்த்து பொரிந்ததும் இதில் வரமிளகாய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து கலந்து பின் கரைத்து வைத்திருந்த புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.
புளி நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் இதில் அரைத்து வைத்த மசாலா கலவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
குழம்பு நன்கு கொதித்து வந்ததும் இதில் பொரித்த வாழைப்பூவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி இறுதியில் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான சைவ நெத்திலி மீன் குழம்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |