காலாவதியான வித்தைகள் வேலை செய்யுமா? பிரதமர் மோடியை காட்டமாக விமர்சித்த பிரகாஷ் ராஜ்
ஜூன் 25 -ம் திகதியை அரசியல் சாசன படுகொலை தினமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அறிவித்தததை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
அரசியல் சாசன படுகொலை தினம்
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 -ம் ஆண்டு ஜூன் 25 -ம் திகதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால், இந்த திகதியை அரசியல் சாசன படுகொலை தினமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அறிவித்துள்ளது.
இந்த தினத்தில் அவசர நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தப்படும் என்று பாஜக அரசு கூறியுள்ளது.
இதனிடையே ராகுல்காந்தி உள்பட இந்தியா கூட்டணி கட்சியினர் அரசியல் சாசனத்தை மதிக்கவில்லை என்று பாஜக கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆனால், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தப்படியே ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதோடு, இந்தியா கூட்டணி எம்பிக்கள் பதவியேற்கும் போதும் கையில் சிறிய ரக அரசியல் சாசன புத்தகத்தை வைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்திராகாந்தி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நினைவு கூறும் வகையில் அந்த நாளை அரசியல் சாசன படுகொலை தினமாக பாஜக அறிவித்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வருகிறது.
பிரகாஷ் ராஜ் விமர்சனம்
இது தொடர்பாக பாஜக அரசை விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அரசியல் சாசன படுகொலை தினம் தொடர்பான ட்வீட்டை குறிப்பிட்ட பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் ஏக்ஸ் தளத்தில், "இன்று ஜூலை 12 ஆம் திகதி, ஜூன் 25 ஆம் திகதியை நாங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.
இதுபோன்ற காலாவதியான வித்தைகள் உண்மையில் வேலை செய்யுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு பாஜகவினரும் தங்களுடைய கருத்தை பதிவிட்டு எதிர்வினையாற்றி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |