சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்.., உதயநிதியை தாக்கிய பவன் கல்யாண்
சனாதன தர்மத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதியை ஆந்திர துணை முதலமைச்சர் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
பவன் கல்யாண் பேசியது
திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், "இங்கு அதிகமான தமிழ் மக்கள் இருப்பதால் தமிழில் சொல்கிறேன். தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை வைரஸ் என்று சொல்கிறார்கள்.
இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு ஒன்று சொல்கிறேன். இந்த மாதிரி பல பேர் சொல்லியிருக்கிறார்கள். அதில் நீங்கள் முதல் ஆளும் இல்லை, கடைசி ஆளும் இல்லை.
சனாதன தர்மம் எப்போதும் அப்படியே தான் நிலைத்திருக்கிறது. அதை தடுக்க முடியாது. சனாதன தர்மத்தை உங்களால் எதுவுமே பண்ண முடியாது, யாராலும் அழிக்கவும் முடியாது.
அதனை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். திருப்பதி பாலாஜி மண்ணில் இருந்து இதை சொல்கிறேன். மதச்சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை அல்ல, அது இருவழிப் பாதை. மரியாதை கொடுத்தால் தான் திரும்ப உங்களுக்கு கிடைக்கும்" என்றார்.
இதற்கு முன்னதாக சனாதனம் குறித்து தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி" என்று பேசியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |