இனி அனைத்து போன்களிலும் Sanchar saathi செயலி கட்டாயம் - அதன் பயன் என்ன? எதிர்ப்பு ஏன்?
இனி அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் Sanchar saathi செயலி கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் மோசடிகளும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சைபர் மோசடியை குறைக்கும் வகையில், மத்திய அரசு புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிவித்துள்ளது.
போன்களில் Sanchar saathi செயலி கட்டாயம்
இதன்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து போன்களிலும் சஞ்சார் சாதி செயலி கட்டாயம் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என மத்திய அரசின் தொலைதொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.

ஆப்பிள், சாம்சங், கூகுள், விவோ, ஓப்போ மற்றும் சியோமி உள்ளிட்ட அனைத்து போன் நிறுவனங்களும் 90 நாட்களில் இந்த உத்தரவை அமுல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட போன்களில், சாப்ட்வேர் அப்டேட் மூலம் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த செயலியை மறைக்கவோ, செல்போனில் இருந்து நீக்கவோ முடியாத வகையில் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சார் சாதி செயலி 2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் மத்திய அரசின் தொலைதொடர்பு துறையால் வெளியிடப்பட்டது.

சைபர் மோசடியை எதிர்த்துப் போராட மக்களுக்கு உதவும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் கூகிள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் மூலம் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
பயன்கள்
ஒரு மொபைல் போன் உண்மையானதா அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதை போனின் 15 இலக்க IMEI எண்ணைப் பயன்படுத்தி இந்த செயலியில் சரிபார்க்கலாம்.
தொலைந்த அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளை பற்றி உடனடியாக புகாரளிக்கலாம்.

இதில் புகார் அளித்தால், அந்த செல்போனை வேறு யாரும் பயன்படுத்த முடியாத வகையில் செயலிழக்க செய்ய முடியும். அதன் பின்னர், செல்போனை ட்ரேஸ் செய்து கண்டறிந்த பின்னர், மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.
மேலும், சந்தேகிக்கப்படும் மோசடி அழைப்புகள், SMS, வாட்சப் அழைப்பு, குறுஞ்செய்தி குறித்தும் புகாரளிக்கலாம்.
மேலும், உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டு இணைப்பு உள்ளது என்பதையும் கண்டறிய முடியும். நீங்கள் அங்கீகரிக்காத சிம் கார்டு உங்கள் பெயரில் வாங்க பட்டிருந்தால், அது குறித்து புகார் அளித்து செயலிழக்க செய்ய முடியும்.
ஏன் எதிர்ப்பு?
மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால், “இந்த நடவடிக்கை குடிமக்களின் தனியுரிமை உரிமையை மீறுவதாகும், இந்த DoT உத்தரவு அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது.
Big Brother cannot watch us. This DoT Direction is beyond unconstitutional.
— K C Venugopal (@kcvenugopalmp) December 1, 2025
The Right to Privacy is an intrinsic part of the fundamental right to life and liberty, enshrined in Article 21 of the Constitution.
A pre-loaded government app that cannot be uninstalled is a… pic.twitter.com/kx33c7fmda
தனியுரிமைக்கான உரிமை என்பது அரசியலமைப்பின் பிரிவு 21இல் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் உள்ளார்ந்த பகுதியாகும்.
முன்கூட்டியே ஏற்றப்பட்ட, நிறுவல் நீக்க முடியாத அரசாங்க செயலி, ஒவ்வொரு இந்தியரையும் கண்காணிக்க ஒரு டிஸ்டோபியன் கருவியாகும். இது ஒவ்வொரு குடிமகனின் ஒவ்வோர் அசைவு, தொடர்பு மற்றும் முடிவைக் கண்காணிப்பதற்கான ஒரு வழிமுறையாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |