இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு!
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 16-ஆம் திகதி தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த சானியா மிர்சா, திடீரென ஓய்வு பெறுவதாகவும் அறிவிப்பை வெளியிட்டார்.
ஐதராபாத்தை சேர்ந்த 35 வயதான சானியா மிர்சா கடந்த 2003 முதல் டென்னிஸ் விளையாடி வருகிறார். இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்து அவர், அவுஸ்திரேலிய ஓபனில் கலந்துக் கொண்டுள்ளார். ஆனால் முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவினார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் உக்ரைனை சேர்ந்த நாடியா கிச்சேனாக் ஆகியோர் இணைந்து ஆடினர். ஆனால் 6 - 4, 7 - 6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தனர்.
இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய சானியா மிர்சா, நடப்பு சீசனுடன் ஒட்டுமொத்த டென்னிஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து விளக்கமளித்த அவர், “இதுதான் எனது கடைசி சீசன் என நான் முடிவு செய்துவிட்டேன். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இந்த முடிவை அவ்வளவு எளிதாக நான் எடுத்து விடவில்லை. காயத்திலிருந்து நான் மீண்டுவர எனக்கு முன்பைவிட கூடுதல் காலம் தேவைப்படுகிறது. எனது மகன் வளர்ந்துவிட்டான். எனக்கு வயதாகிவிட்டது” என சொல்லி தனது ஓய்வை அறிவித்துள்ளார் சானியா.
சானியாவுக்கு இந்த தொடரில் இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கலப்பு பிரிவில் போபண்ணாவுடன் இணைந்து விளையாடவுள்ளார்.