மோடி உலகக்கிண்ணத்தை வென்றாரா? பாரிய சோகம் நடந்துள்ளபோது அங்கு செல்லவில்லை - சிவசேனா மூத்த தலைவர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்திற்கு செல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியை சந்தித்திருக்கிறார் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
இந்திய அணி சாம்பியன்
மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 கிண்ணத்தை வென்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி அணியினரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை கூறினார்.
சஞ்சய் ராவத் விமர்சனம்
இந்த நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கிரிக்கெட் வீரர்களை வரவேற்க குஜராத்தில் இருந்து பேருந்து கொண்டு வர வேண்டுமா? என கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''மோடி டி20 உலகக்கிண்ணத்தை வென்றாரா? கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சி ஏற்படும் சமயங்களில், வெற்றி பெற்றவர்களை பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு அழைக்கிறார். அதே சமயம் ஹத்ராஸ் மற்றும் மணிப்பூரைப் போல் நெருக்கடியும், சோகமும் ஏற்படும் இடங்களுக்கு மோடி செல்வதில்லை.
இந்திய கிரிக்கெட் அணியை சந்திக்க மோடிக்கு நேரம் உள்ளது. அவர் சந்திக்கக் கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் உத்தர பிரதேசத்தில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தில் மிகப்பெரிய சோகம் நடந்துள்ளது. அவர் அங்கும் செல்ல வேண்டும். அவர் மணிப்பூருக்கும் செல்லவே இல்லை.
கிரிக்கெட் வீரர்களை வரவேற்கவும், மும்பையில் பேரணி நடத்தவும் குஜராத்தில் இருந்து மும்பைக்கு பேருந்தை கொண்டு வருவதற்கான காரணம் என்ன? எங்களிடமே இதுபோன்ற பேருந்துகள் உள்ளன. அவ்வாறு இல்லையென்றாலும் கூட, மும்பையில் ஒரே இரவில் அதனை எங்களால் தயாரித்துவிட முடியும்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |