பாகிஸ்தானுக்கு சாம்பியன் டிராபியை வென்ற சர்ஃபராஸ் அகமது ஓய்வு அறிவிப்பு
பாகிஸ்தானின் முன்னாள் அணித்தலைவரான சர்ஃபராஸ் அகமது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்ஃபராஸ் அகமது
2017ஆம் ஆண்டு தனது தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானுக்கு வென்று கொடுத்தவர் சர்ஃபராஸ் அகமது.

2007ஆம் ஆண்டு முதல் விக்கெட் கீப்பராகவும், துடுப்பாட்ட வீரராகவும் விளையாடி வந்த இவர், 2023ஆம் ஆண்டுக்கு பின் அணியில் இடம்பெறவில்லை.
சர்வதேச கிரிக்கெட்டில் 54 டெஸ்ட் போட்டிகளில் 3031 ஓட்டங்களும், 117 ஒருநாள் போட்டிகளில் 2315 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.
அதேபோல் 61 டி20 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 818 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அத்துடன் டெஸ்டில் 160, ஒருநாள் போட்டிகளில் 119 மற்றும் டி20யில் 36 என மொத்தம் 315 கேட்சுகள், 56 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு
இந்த நிலையில் சர்ஃபராஸ் அகமது (Sarfaraz Ahmed) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்ஃபராஸின் தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 11 டி20 சர்வதேச தொடர்களை வென்று சாதனை படைத்தது.

அனைத்து வகையான கிரிக்கெட் வடிவங்களையும் சேர்த்து, சர்ஃபராஸ் அகமது பாகிஸ்தான் அணியை மொத்தம் 100 போட்டிகளில் வழிநடத்தினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் சர்ஃபராஸ் அகமது, "பாகிஸ்தான் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவமாகும். 2006ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோர் (U-19) அணியை உலகக்கிண்ண வெற்றிக்கு வழிநடத்தியது முதல், 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றெடுத்தது வரை, பாகிஸ்தான் அணியின் சீருடையில் கழித்த ஒவ்வொரு தருணமும் எனக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது" என கூறியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |