நள்ளிரவு 1 மணிக்கு சசிகலாவிற்கு மீண்டும் மூச்சுத்திணறல்! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி... விடுதலையை நெருங்கும் நேரத்தில் பரபரப்பு
சசிகலாவிற்கு நள்ளிரவில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சசிகலாவின் தண்டனை காலம் முடிந்து அவர் வருகிற 27ஆம் திகதி விடுதலை ஆகவுள்ளார்.
இந்நிலையில், நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு முதல் கட்டமாக சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால், நேற்று மாலை 5.45 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையின் தண்டனை கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சசிகலாவிற்கு ஆன்டிஜென் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
மேலும் அவர் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு சசிகலாவிற்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு அவர் உடனடியாக மாற்றப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதையறிந்த சசிகலா உறவினர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் அவரின் உடல்நிலை குறித்து தெளிவுப்படுத்துங்கள் என கோரியுள்ளனர்.
இதனிடையில் விடுதலை ஆக இருந்த நிலையில் சசிகலாவிற்கு உடல்நலம் பாதிப்படைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.