இரவில் விடுதலையாகும் சசிகலா... சென்னைக்கு வரும் பாதை இதுதான்
இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான பின்னர் சென்னைக்கு சசிகலா வரும் பாதை தொடர்பான தகவல் தெரிய வந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருகிற 27ம் திகதி விடுதலையாவார் என்றும், அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சசிகலாவின் அபராதத் தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி அவர் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளதால், அவரது விடுதலை உறுதியாகியுள்ளது. ஆனால், அவரது விடுதலையை தள்ளிப் போடும் நடவடிக்கைகள் திரைமறைவில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன.
இந்த சூழலில் டிடிவி தினகரன் டெல்லி சென்றார். அதன் பின்னர் சசிகலா விடுதலையாவது ஒரு சில நாள்கள் முன்னரே இருக்கலாம் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சசிகலாவில் விடுதலைதான் தங்களுக்கு தைப் பொங்கல் என்று கூறி வரும் அமமுகவினர், அவரை உற்சாகமாக வரவேற்க தயாராகி வருகின்றனர்.
இதனிடையே, வழக்கமான கைதிகளுடன் சசிகலாவை விடுதலை செய்யாமல் அவரது பாதுகாப்பு கருதி தாமதமாக விடுதலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மற்ற கைதிகள் இரவு 7.30 மணிக்கும், சசிகலாவை 9.30 மணிக்கும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலாவை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று அங்கு அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனத்தில் அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கர்நாடக பொலிசார் பாதுகாப்புடன் எல்லை வரை வரும் சசிகலா அங்கிருந்து ஆம்பூர் மார்க்கமாக சென்னைக்கு வரவுள்ளார்.
சசிகலாவுக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க அமமுகவினர் தயாராகி வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.