சசிகலா விடுதலை... இன்னொரு வழக்கில் நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை
எதிர்வரும் வரும் 27ம் திகதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளது என வருமான வரி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தகவல் தெரிவித்து உள்ளது.
சசிகலாவுக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
சசிகலா வரும் 27 ம் திகதி விடுதலையாக வாய்ப்பு உள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை எனவு சசிகலா தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் பிப்ரவரி 4 ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது.
3 பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் சசிகலாவும், இளவரசியும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினர்.
இதையடுத்து சசிகலா தனக்கு சிறை விதிமுறையின்படி சலுகை காட்டி, முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத்துறையில் மனு அளித்தார்.
அந்த மனு பரிசீலனையில் உள்ள நிலையில், சசிகலா வருகிற 27ம் திகதி விடுதலையாக உள்ளார் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
27ம் திகதி எந்த நேரத்தில் அவர்களை விடுதலை செய்வது என்பது குறித்து பொலிசார் ரகசியமாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.
மேலும், சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போது அவரது பாதுகாப்பு கருதி கர்நாடக மாநில எல்லைக்குள் தமிழகத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கப்படாது என்பதும் தெரியவந்துள்ளது.