7 மாதங்களில் வெளிநாட்டவர்கள் 101 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய மத்திய கிழக்கு நாடு
சவுதி அரேபியாவில் இரண்டு எத்தியோப்பியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டினரின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது.
மொத்தம் 189 பேர்களுக்கு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய அந்த இரு எத்தியோப்பியர்களும் தூக்கிலிடப்பட்டதாக சவுதி உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஆண்டு பிறந்து இதுவரை சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 101 என சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.
எத்தியோப்பியாவைச் சேர்ந்த கலீல் காசிம் முஹம்மது உமர் மற்றும் முராத் யாகூப் ஆதம் சியோ ஆகிய இருவரும் ஹாஷிஷ் கடத்தலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டனர்.
இதனையடுத்து தகுதிவாய்ந்த நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பின்னர், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது என அறிக்கை ஒன்றை சவுதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் 88 சவுதி அரேபியர்கள் உட்பட மொத்தம் 189 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நியாயமான விசாரணை
2024ல் வெளிநாட்டவர்களுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை எண்ணிக்கையானது நவம்பர் மாதத்தில் தான் 100 கடந்தது. மேலும், 2024ல் மொத்தம் 338 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2023ல் இந்த எண்ணிக்கை 170 என்றும், 2022ல் இந்த எண்ணிக்கை 196 எனவும் இருந்துள்ளது. சுமார் மூன்று வருட தடைக்குப் பிறகு, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான மரணதண்டனைகளை சவுதி அதிகாரிகள் மீண்டும் அமுல்படுத்தினர்.
இந்த நிலையில், சவுதி அரேபியாவில் நியாயமான விசாரணையைப் பெறுவதற்கு வெளிநாட்டினர் கூடுதல் தடைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதையும், குறிப்பாக நீதித்துறை அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாததாலும், அவர்கள் வெளிநாட்டினர் என்பதாலும் நெருக்கடியை எதிர்கொள்வதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |