ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியான SBI ஊழியர்கள்
எஸ்பிஐ ஃபண்ட்ஸ் பங்குச் சந்தையில் நுழைவதால், அந்நிறுவனத்தில் பல வருடங்களாக ஊழியர்கள் வைத்திருந்த பங்கு உரிமையானது, பல நிர்வாகிகளுக்குப் பல கோடி ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் நிலையில் உள்ளது.
ஒரே நாளில் பல கோடி
இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் ஐபிஓ வெளியிட்டு அதன் பங்குகள் இன்று பங்குச்சந்தையில் தனது வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.

இந்தியாவில் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஐபிஓ இது. இந்த ஐபிஓ வெளியீடு எஸ்பிஐ வங்கி ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.
பல ஊழியர்களும் ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதிகளாகியுள்ளனர். இந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டில் ஒரு பங்கின் விலை 574 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 7 சதவீதம் கூடுதல் விலையில் பங்குகள் விற்பனைக்கு வந்தன. பிஎஸ்இ-யில் 610 ரூபாய்க்கும், என்எஸ்இ-யில் 613.30 ரூபாய்க்கும் பங்குகள் வர்த்தகம் செய்ய தொடங்கின.
இதன் மூலம் நிறுவனத்தின் பங்கு உரிமை திட்டத்தின் கீழ் பங்குகளை வைத்திருந்த சுமார் 13 ஊழியர்கள் ஒரே நாளில் பெரும் பணக்காரர்களாக மாறியுள்ளனர். குறிப்பாக நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் தேவிந்தர் பால் சிங் தன்னிடம் 21.14 லட்சம் பங்குகளை வைத்துள்ளார்.
தற்போது அவற்றின் மதிப்பு 121 கோடி ரூபாய். முதலீட்டு பிரிவு தலைமை அதிகாரியான சீனிவாசன் ராம ஐயர் வசம் உள்ள 18.25 லட்சம் பங்குகளின் மதிப்பு சுமார் 105 கோடி ரூபாயாக உள்ளது.
தலைமை அதிகாரிகளுள் ஒருவரான சீனிவாஸ் ஜெயின் 59 கோடி ரூபாய் பங்குகளை கொண்டுள்ளார். இதே போல தொடக்க காலத்தில் நிறுவனம் கொடுத்த பங்குகளை அப்படியே வைத்திருந்த பல ஊழியர்களும் தலா 1 கோடிக்கும் அதிகமாக லாபம் பார்த்துள்ளனர்.
மிகப்பெரிய லாபம்
2018ஆம் ஆண்டில் தான் எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மேண்ட் ஊழியர்களுக்கு பங்கு என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதில் பங்குகளை பெற்ற ஊழியர்கள் சிறந்த லாபம் பெற்றுள்ளனர்.
இந்த திட்டம், ஊழியர்களுக்கு 39 முதல் 455 ரூபாய் வரையிலான விலையில் பங்குகளை வழங்கியது. இன்று ஐபிஓ விலை 574 ரூபாயாக உயர்ந்திருப்பது, நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.
மட்டுமின்றி, வலுவான நிறுவன ரீதியான தேவையை ஈர்த்த பிறகே, எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மேண்ட் நிறுவனம் சந்தையில் நுழைந்துள்ளது.

ஐபிஓ தொடங்குவதற்கு முன்னதாக, எஸ்பிஐ ஃபண்ட்ஸ் முக்கிய முதலீட்டாளர்களிடமிருந்து 129 முன்னணி நிறுவனங்கள் உட்பட, கிட்டத்தட்ட ரூ. 2,663 கோடியைத் திரட்டியது. மேலும் இந்த நிறுவனம், ஐபிஓ-வுக்கு முந்தைய நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறத்தாழ ரூ. 1,880 கோடியைத் திரட்டியிருந்தது.
மட்டுமின்றி, ஜூலை 14 முதல் ஜூலை 16 வரையிலான மூன்று நாள் சந்தா காலம் முழுவதும் முதலீட்டாளர்களின் ஆர்வம் வலுவாக இருந்தது. இந்த வெளியீடு ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 42 மடங்கு சந்தா பெறப்பட்டது.
இதற்கு முக்கிய காரணம் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களே ஆவர். அவர்களில், நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு சுமார் 140 மடங்கு அதிகமாக சந்தா பெறப்பட்டது.
நிறுவனம் சாராத முதலீட்டாளர் பிரிவில் 22.51 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், சில்லறை முதலீட்டாளர் பிரிவில் 3.6 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |