கலைந்த Schengen Visa கனவுகள்... ரூ 136 கோடியை இழந்த இந்தியர்கள்
Schengen Visa மறுக்கப்பட்டதால் அதிக இழப்பை எதிர்கொண்ட நாடுகளில் மூன்றாமிடத்தில் இந்தியா உள்ளது.
ஷெங்கன் விசா நிராகரிப்பு
2024 ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து 1.65 லட்சத்திற்கும் அதிகமான ஷெங்கன் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், திருப்பிச் செலுத்த முடியாத கட்டணங்களில் சுமார் ரூ 136 கோடி மொத்த நிதி இழப்பு ஏற்பட்டது.
அதிக நிதி இழப்பை எதிர்கொண்ட மற்ற இரு நாடுகள் அல்ஜீரியாவும் துருக்கியும். ஐரோப்பிய ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் ஷெங்கன் விசா நிராகரிப்பு விகிதம் 15 சதவீதமாக உள்ளது.
Conde Nast வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், இந்தியாவில் இருந்து சுமார் 11.08 லட்சம் ஷெங்கன் விசா விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 5.91 லட்சம் ஒப்புதல் அளிக்கப்பட்டு 1.65 லட்சம் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி, அதிக நிராகரிப்பு விகிதத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் துருக்கி, மொராக்கோ மற்றும் சீனாவும் இணைந்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் மட்டும் நிராகரிக்கப்பட்ட ஷெங்கன் விசா விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியது என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.
இதனூடாக ஐரோப்பிய ஆணையம் இந்திய மதிப்பில் ரூ 1410 கோடி அல்லது 145 மில்லியன் யூரோ வருவாய் ஈட்டியுள்ளது. இந்தியர்களால் மட்டும் 14 மில்லியன் யூரோ அல்லது இந்திய மதிப்பில் ரூ 136.6 கோடி சம்பாதித்துள்ளனர்.
90 யூரோவாக
பெரும்பாலான இந்திய விசாக்களை பிரான்ஸ் நிர்வாகம் நிராகரித்துள்ளது, இதன் எண்ணிக்கை 31,314 என்றே தெரிய வந்துள்ளது. பிரான்ஸை அடுத்து இந்தியர்களின் விசா விண்ணப்பங்களை சுவிட்சர்லாந்து (26,126), ஜேர்மனி (15,806), ஸ்பெயின் (15,150) மற்றும் நெதர்லாந்து (14,569) ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன.
மேலும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய விண்ணப்பதாரர்களுக்கு ஷெங்கன் விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணம் 80 யூரோவில் இருந்து 90 யூரோவாக உயர்த்தப்பட்டுள்ளது.
12 வயதுக்குட்பட்ட சிறார்கள், மாணவர்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிற சிறப்பு அந்தஸ்து பெற்றவர்கள் உள்ளிட்டவர்களுக்கு உயர்த்தப்பட்ட கட்டண அமைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையில் விசா நிராகரிப்பு மற்றும் நிதி இழப்புகள் பயண முகவர் மற்றும் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக, இந்த விவகாரம் நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா, வணிகங்கள் மற்றும் கல்வி வாய்ப்புகளையும் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |