ஷெங்கன் மண்டலத்திலிருந்து ஸ்பெயின் நீக்கப்பட வேண்டும்... ஐரோப்பிய நாடொன்று அதிரடி
ஸ்பெயினின் சியூட்டா பகுதிக்குள் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நுழைந்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் விசா இல்லாத ஷெங்கன் பயண மண்டலத்திலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்ய வேண்டும் என இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி கோரியுள்ளார்.
தயாராக உள்ளோம்
பிரதமர் மெலோனியின் கருத்து, வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ தஜானி அன்றைய தினம் முன்னதாகத் தெரிவித்ததையே பிரதிபலித்துள்ளன.

பிரதமர் மெலோனி தனது சமூக ஊடகத்தில், நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்; அக்கூட்டங்கள் நிறைவடைந்ததும், ஸ்பெயினுடனான ஷெங்கன் (Schengen) ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது போன்ற சிறப்புக் நடவடிக்கைகள் உட்பட, எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என பதிவு செய்துள்ளார்.
மொராக்கோவை ஒட்டியுள்ள சியூட்டா நகரத்தில் இருந்து வெளிவரும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் மெலோனி தெரிவித்துள்ளார். குழந்தைகள் உட்பட அவர்களில் பெரும்பாலானோர் சியூட்டா பகுதிக்குச் செல்வதற்கு நீந்திச் செல்ல வேண்டியிருந்தது.
இதனிடையே, சியூட்டாவை அடைய முயன்றவர்களில் குறைந்தது ஒன்பது பேர் மரணமடைந்துள்ளதாக ஸ்பானிய அரசாங்கக் குழுவினர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் வேடிக்கை பார்க்க இத்தாலியால் முடியாது என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ தஜானி, ஸ்பெயினுடனான ஷெங்கன் பகுதியை மூடுவதற்கு நான் ஆதரவாக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
அத்துடன், முறையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற புலம்பெயர்தலால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நோக்கம்
மேலும், சியூட்டாவிலிருந்து வரும் காட்சிகள் அனைத்தும், 500,000-க்கும் மேற்பட்ட முறையற்ற குடியேறிகளுக்கு ஸ்பானியக் குடியுரிமையை, அதன் மூலம் ஐரோப்பியக் குடியுரிமையையும், வழங்குவது என்ற ஸ்பெயின் அரசாங்கத்தின் முடிவு எவ்வளவு தவறானது என்பதையும், அது மனிதக் கடத்தலை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதையும் காட்டுகின்றன என்றார்.

இதனிடையே, அரசியல் நோக்கங்களுக்காகக் குடியேற்ற விவகாரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, ஸ்பானிய வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் லூயிஸ் அல்வாரெஸ் தஜானிக்கு பதிலளித்துள்ளார்.
ஷெங்கன் பகுதி என்பது, தங்கள் பொதுவான எல்லைகளில் கட்டுப்பாடுகளை அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ள 29 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய, திறந்த எல்லைகளைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.

இத்தாலியின் தீவிர வலதுசாரி துணைப் பிரதமரான மத்தேயோ சால்வினி, முழு ஷெங்கன் மண்டலத்தையும் முற்றிலுமாக இடைநிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |