பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த இந்து அமைப்பு தலைவர் - வெளியான அதிர்ச்சி பின்னணி
பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயக்கமடைந்த மாணவர்கள்
கர்நாடக மாநிலம், சவுந்தட்டி தாலுகா, ஹுலிகட்டியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.
கடந்த ஜூலை 14 ஆம் திகதி, இந்த பள்ளியை சேர்ந்த 12 மாணவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனர்.
உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதில், அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பள்ளியின் தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வந்தது கண்டறியப்பட்டது.
மேலும், அந்த தண்ணீர் தொட்டியின் உள்ளே ஒரு குளிர்பான பாட்டிலும் கண்டறியப்பட்டது.
மத வெறுப்பு
அதனை வைத்து, அதை எந்த கடையில் யார்வாங்கினார்கள் என நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீ ராம் சேனா தலைவர் சாகர் பாட்டீல் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சுலேமான் கோரிநாயக் என்பவர் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
அவர் இஸ்லாமியர் என்பதால் அவர் மீது உள்ள வெறுப்புணர்வில், அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி அவரை வேறு பள்ளிக்கு மாற்ற இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றியுள்ளார் சாகர் பாட்டீல்.
இதை செய்யாவிட்டால் உனது காதல் உறவை வெளிப்படுத்திவிடுவேன் என அந்த கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா மதர் என்பவரை மிரட்டியுள்ளார்.
இதன் காரணமாக கிருஷ்ணா மதர், நாகனகவுடா பாட்டீல் என்பவருடன் சேர்ந்து, முனவல்லி நகரத்திலிருந்து பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கியுள்ளார்.
அந்த பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு குளிர்பான பாட்டிலில் கலந்து, அந்த பள்ளியை சேர்ந்த மாணவனுக்கு ரூ.500 பணம், சிற்றுண்டி மற்றும் சாக்லேட்கள் ஆகியவற்றை லஞ்சமாக கொடுத்து தண்ணீர் தொட்டியில் கலக்க வைத்துள்ளனர்.
அந்த சிறுவன் பாட்டிலை அங்கே விட்டு சென்றதால், அதனை வைத்து காவல்துறையினர் இந்த குற்றவாளிகளை கண்டறிந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |