விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
உலகில் விமான விபத்துகள் இனி அதிகமாக நடக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள விஞ்ஞானிகள், புதிய அச்சுறுத்தலையும் அடையாளம் கண்டுள்ளனர்.
புதிய அச்சுறுத்தல்
சமீப மாதங்களில் விமான விபத்துகள் அதிகமாக நடந்து வருவது தொடர்பில் விஞ்ஞானிகள் குழு ஆய்வொன்றை முன்னெடுத்துள்ளனர். அதில், மிக ஆபத்தான புதிய அச்சுறுத்தல் ஒன்றையும் அடையாளம் கண்டுள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் சராசரியாக இரண்டு கைவிடப்பட்ட ராக்கெட்டுகள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவதாக உறுதி செய்துள்ள விஞ்ஞானிகள், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பெரிய விண்வெளி குப்பைகள் வானத்திலிருந்து விழுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் கைவிடப்பட்ட ராக்கெட்டுகள், சிதைந்த செயற்கைக்கோள் பாகங்கள் என பரபரப்பான வணிக விமான பாதையின் ஊடாக பூமிக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் நான்கில் ஒரு பங்கு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், வடக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக்கின் முக்கிய நகரங்களைச் சுற்றியுள்ள வான்வெளிகள் இந்த விண்வெளி குப்பைகளால் மிகவும் ஆபத்தில் இருப்பதாக பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது விமான நிலையங்களை மூடச்செய்யலாம், விமான சேவைகளின் தாமதங்களுக்கும் ரத்துக்கும் காரணமாகலாம், அத்துடன் குறிப்பிட்ட அந்தப் பகுதிகளில் விண்வெளி குப்பைகளால் நடுவானில் ஒரு விமானம் விபத்துக்குள்ளாவதற்கு தோராயமாக 430,000 இல் ஒரு வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்டார்ஷிப் சோதனை விமானம்
அமெரிக்காவில் சமீப நாட்களில், அல்லது ஆண்டு பிறந்து 40 நாட்களில் மிக மோசமான விமான விபத்துகள் நடந்துள்ளதை அடுத்தே விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனவரி 29ம் திகதிக்கு பின்னர் மிக மோசமான 3 விமான விபத்துகள் நடந்துள்ளது. மேலும், விமான சேவை நிறுவனங்களின் அதிகரிப்பும் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட ஒரு காரணம் என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிப்ரவரி 16 அன்று ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்குள் எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஏழாவது ஸ்டார்ஷிப் சோதனை விமானம் நடுவானில் சிதைந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து விபத்தில் சிக்காமல் இருக்கவும் அதன் விளைவாக ஏற்படும் குப்பைகளில் மோதுவதை தவிர்க்கவும் கரீபியன் முழுவதும் பறக்கும் விமானங்கள் விரைவாக திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியானது.
மட்டுமின்றி, ஸ்பேஸ்எக்ஸ் வெடித்துச் சிதறியது காரணமாக 20க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகிவிட்டதாகவோ அல்லது திருப்பி விடப்பட்டதாகவோ தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |