கடைசிவரை அவுட் ஆகாமல் வெற்றிபெற வைத்த கேப்டன்..ஸ்கொட்லாந்திடம் வீழ்ந்த நமீபியா
டி20 உலகக்கிண்ணப் போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது.
எராஸ்மஸ் அதிரடி
பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் ஸ்கொட்லாந்து (Scotland) மற்றும் நமீபியா (Namibia) அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணப் போட்டி நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற நமீபியா அணி முதலில் துடுப்பாடியது. கோட்சி டக் அவுட் ஆகி வெளியேற, டேவின் 20 ஓட்டங்களும், பிரைலிங் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் அணித்தலைவர் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் அதிரடியில் மிரட்டினார். மறுமுனையில் ஜனே கிரீன் 27 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 28 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஸ்கொட்லாந்து வெற்றி
இறுதியில் நமீபியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. எராஸ்மஸ் 31 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசினார். ஸ்கொட்லாந்து அணி தரப்பில் வீல் 3 விக்கெட்டுகளும், கர்ரி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி 18.3 ஓவர்களில் 157 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணித்தலைவர் பெர்ரிங்டன் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் எடுத்தார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த மைக்கேல் லீஸ்க் 17 பந்துகளில் 4 சிக்ஸர் விளாசி 35 ஓட்டங்கள் எடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |