ஏதென்ஸில் சூட்கேசில் சடலமாக அடைக்கப்பட்ட பிரித்தானிய பெண்: கொலையாளி சிக்கியது எப்படி?
ஏதென்ஸில் பிரித்தானிய பெண் கொலை வழக்கில் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பெண்
கிரீஸ் நாட்டின் தலைநகரான எதென்ஸின் கிப்செலி(Kypseli) பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் கிடந்த சூட்கேஸில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
விசாரணையின் போது சூட்கேசில் சடலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தவர் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பகுதியை சேர்ந்த 38 வயது எலிசபெத்-ஜேன் ராஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவர் உயிரிழந்து 5 முதல் 7 நாட்களுக்கு பிறகே சூட்கேஸில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடகத்தின் தகவல்படி, எலிசபெத்-ஜேன் ராஸ் ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்கா வழியாக சைப்ரஸ் மூலமாக கடந்த ஜூன் 29ம் திகதி கிரீஸ் நாட்டிற்கு வந்தடைந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 வயதுடைய நபர் கைது
அவர் உயிரிழந்த சில நாட்களுக்கு பிறகு அவரது வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது செல்போனில் இருந்து குறுஞ்செய்தி ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரான வெளிநாட்டைச் சேர்ந்த 26 வயது நபர் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலை, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்ட மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய ஆறுதல் வழங்கப்பட்டு வருவதாக பிரிட்டன் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |