காவல்துறை பொறுத்துக்கொள்ளாது! ஸ்கொட்லாந்தில் கால்பந்து கிளப்களுக்கு எச்சரிக்கை
கால்பந்து மைதான வன்முறை சம்பவங்களில் கிளப்கள் அலட்சியம் காட்டுவதாக ஸ்கொட்லாந்து காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
ரசிகர்களால் வன்முறை
ஸ்கொட்டிஷ் கிண்ண கால்பந்து தொடரில் செல்டிக் மற்றும் ரேஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான முக்கியப் போட்டிகளில் ரசிகர்களால் வன்முறை உள்ளிட்ட குழப்பங்கள் ஏற்பட்டன.
அதேபோல் பிரீமியர்ஷிப் பட்டத்தை நிர்ணயிக்கும் செல்டிக் மற்றும் ஹார்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி உட்பட பல ஆட்டங்களிலும் இதே நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் தொடர்பில் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு போட்டிகளிலும் ஆடுகளத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவங்கள் நிகழ்ந்தன.
செல்டிக் அணி பட்டம் வென்ற பிறகு, கிளாஸ்கோ நகர மையத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
ஸ்கொட்டிஷ் காவல்துறை நடவடிக்கை
இந்த நிலையில், ஸ்கொட்டிஷ் காவல்துறை ஆணையத்தின் (SPA) பொது வாரியக் கூட்டம் நடந்தது. அதில் கால்பந்து தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருவது குறித்து பேசப்பட்டது.
தலைமை காவலர் ஜோ ஃபாரெல் கூறுகையில், "குடும்ப வன்முறை போன்ற கடுமையான குற்றங்களை விசாரிப்பதில் இருந்து, ஒழுங்கீனத்திற்குப் பொறுப்பான ரசிகர்களைத் தேடுவதற்காக டசின் கணக்கான அதிகாரிகள் திசை திருப்பப்பட்டிருக்கின்றனர்.
இந்தப் பிரச்சனையை கிளப்புகளின் தலைவர்கள் 'சலிப்பூட்டும் வகையில்' கையாண்டு வருகின்றனர். இது ஒரு அவமானமாக மாறிவிட்டது. கிளப்புகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்பந்து தொடர்பான பிரச்சனைகள் ஒரு முக்கியமான பொதுப் பாதுகாப்புப் பிரச்சனையாக மாறி வருகிறது. இந்த குழப்பம் நிறைந்த மற்றொரு பருவத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. கால்பந்தில் காவல்துறைக்கு ஒரு வலுவான பங்கு உண்டு. ஆனால், ஸ்கொட்லாந்தில் கால்பந்து தொடர்பான பொறுப்புக் கூறலும், உரிமையுணர்வும் இல்லை என்பதில் சந்தேகமில்லை" என்றார்.
இதற்கிடையில், ஸ்கொட்டிஷ் காவல்துறை கூட்டமைப்பு (SPF), விளையாட்டுகளுக்கு அனுமதிக்கப்படும் ரசிகர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்லது பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய கதவுகளுக்குப் பின்னால் போட்டிகளை நடத்துவது போன்ற யோசனைகளை முன்வைத்தது.
மேலும், நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டினால் கிளப்புகள் புள்ளிகள் குறைக்கப்பட வேண்டும் அல்லது சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |