தரைமட்டமான 12 மாடி கட்டிடம்... இடிபாடுகளிடையே கேட்ட அலறலும் விரல் அனக்கமும்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தில், நாயுடன் நடக்க சென்ற நபர் கண்ட காட்சி, ஒரு சிறுவனை உயிருடன் மீட்க காரணமாக அமைந்துள்ளது.
புளோரிடாவின் சர்ப்ஸைடு நகரில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகமே இடிந்து தரைமட்டமானது. இதுவரை 35 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டதுடன், 99 பேர்களின் நிலை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஒருவர் இறந்ததாக மீட்புக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தின் போது நாயுடன் அப்பகுதி வழியாக நடக்க சென்ற ஒருவர், மெல்லிய குரலில் அலறல் சத்தம் கேட்டதுடன், அந்த இடிபாடுகளின் இடையே குட்டி விரல்களையும் கண்டுள்ளார்.
மட்டுமின்றி, அந்த சிறுவன் தனது காயமடைந்த கைகளை வெளியே நீட்டி, உதவுங்கள் என கெஞ்சியபடி இருந்துள்ளான். உடனடியாக அந்த நபர் பொலிசாருக்கும் மீட்புக்குழுவினருக்கும் தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், போராடி அந்த சிறுவனை மீட்டுள்ளனர். தனது குடியிருப்பினுள் தூக்கத்தில் இருந்த சிறுவன், கட்டிடம் இடிந்து விழுந்த நேரம் படுக்கையின் அடியில் சிக்கியுள்ளான்.
இதனாலையே, உயிர் தப்பியிருக்கலாம் என கூறுகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ள இன்னும் 99 பேர்கள் தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.