நீரோட்டத்தில் சிக்கிய சிறுமி: காப்பாற்றிய நபரைத் தேடும் அதிகாரிகள்
அமெரிக்காவில் கடல் நீரோட்டத்தில் சிக்கிய சிறுமி ஒருத்தியைக் காப்பாற்றிய நபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவிலுள்ள கடற்கரை ஒன்றில் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருத்தி கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டாள்.
நீரோட்டத்தில் சிக்கிய சிறுமி
மிர்ட்டில் பீச் என்னுமிடத்தில் அமைந்துள்ள கடற்கரையில் நிகழ்ந்த அந்த சம்பவம் பரபரப்பை உருவாக்கிய நிலையில், பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக ஒருவர் தண்ணீரில் குதித்துள்ளார்.
பிள்ளையைக் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு அவர் சத்தமிட, அங்கிருந்த சிலர் தண்ணீருக்குள் குதித்து பிள்ளையை அவரிடமிருந்து வாங்கி கரைக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பிள்ளையைக் காப்பாற்றிய நபர் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
நேற்றிரவு உள்ளூர் நேரப்படி சுமார் 8.00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், அவரைத் தேடும் பணி இப்போதும் தொடர்வதாகவும், அவரை இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், குழந்தையைக் காப்பாற்றிவிட்டு தண்ணீரில் மூழ்கிய அந்த நபருக்காக பிராத்தனை செய்யுமாறு பலரும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அமெரிக்க ஊடகங்கள் அந்த நபரின் பெயரை வெளியிடாமல், அவரை ’நல்ல சமாரியன்’ என்று மட்டுமே குறிப்பிட்டுவரும் நிலையில், அவரால் காப்பாற்றப்பட்ட பிள்ளையின் பெயரையோ, அவள் எப்படி இருக்கிறாள் என்பது குறித்த விவரங்களையோ அதிகாரிகள் வெளியிடவில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |