பறக்கும் விமானத்தில் சிறுவனை வலுக்கட்டாயமாக கட்டிவைத்த ஊழியர்கள்: மறுத்த விமான நிறுவனம்
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் 11 வயது சிறுவன் குழாய் ஒட்ட பயன்படுத்தும் நாடாவால் வலுக்கட்டாயமாக கட்டிவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 10ம் திகதி மாயியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்ற விமானத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. தாயாருடன் பயணித்த 11 வயது சிறுவன், தாயாருக்கும் எஞ்சிய விமான பயணிகளுக்கும் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பயணிகள் பலர் சிறுவனை அமைதிப்படுத்த முயன்றும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இதனிடையே ஆண் பயணிகள் இருவர் சிறுவனை இருக்கையுடன் வலுக்கட்டாயமாக பிடித்துக்கொள்ள, ஆண் விமான ஊழியர் ஒருவர் குழாய் ஒட்ட பயன்படுத்தும் நாடாவால் சிறுவனை பிணைத்துள்ளார்.
இச்சம்பவம் வெளியாகி விமான பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அமெரிக்க ஏர்லைன்ஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், நெகிழ்வான பட்டைகளாலையே சிறுவனை பிணைத்துள்ளதாக விளக்கமளித்துள்ளனர்.
சிறுவனால் விமானத்தில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பாதிப்பு காரணமாக அந்த விமானம் Honolulu பகுதிக்கு திருப்பி விடப்பட்டது எனவும், பயணிகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் சிலர் ஹொட்டல்களில் தங்க வைக்கப்பட்டதாகவும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை, சிறுவன் தொடர்பிலான சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு எங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.