விமானங்களில் 60 சதவீத இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்படும்: இந்தியாவின் DGCA அறிவிப்பு
விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான DGCA வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு விமானத்திலும் உள்ள இருக்கைகளில் குறைந்தது 60 சதவீதத்தை எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி விமான நிறுவனங்கள் வழங்கத் தொடங்கும்.
ஏப்ரல் 20 முதல் அமுல்
மட்டுமின்றி, தெளிவான மற்றும் வெளிப்படையான இருக்கை ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றுமாறும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு நியாயமான அணுகலை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு விமானத்திலும் உள்ள இருக்கைகளில் குறைந்தது 60 சதவீதத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மார்ச் 18 அன்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், மார்ச் 20 அன்று திருத்தப்பட்ட விமானப் போக்குவரத்துச் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் அடிப்படையில், இந்த நடவடிக்கை ஏப்ரல் 20 முதல் அமுலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஒரே PNR (பயணிகள் பெயர் பதிவு) இலக்கத்தின் கீழ் முன்பதிவு செய்த பயணிகள், இயன்றவரை ஒன்றாகவே அமர்த்தப்பட வேண்டும் என்றும் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
முன் வரிசை இருக்கைகள்
பொதுவாக, ஒரே வரிசையில் அருகருகே அமைந்துள்ள இருக்கைகளையே இது குறிக்கிறது. இந்த நிலையில், விமான நிறுவனங்கள் புதிய விதியைச் செயல்படுத்தத் தயாராகி வருவதாகவும், தற்போது, 20 சதவீத இருக்கைகளை மட்டுமே கூடுதல் கட்டணமின்றித் தெரிவு செய்ய முடியும்; எஞ்சியவற்றுக்குக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாக பயணிகள் விரும்பிய இருக்கையைத் தெரிவு செய்ய ரூ 200 முதல் 2,100 வரையில் ஒவ்வொரு விமான நிறுவனமும் கூடுதல் கட்டணமாக வசூலிக்கிறது. இந்தக் கட்டணமானது பொதுவாக முன் வரிசை இருக்கைகள் உள்ளிட்ட சலுகைகளுக்காக வசூலிக்கப்படுகிறது.

மேலும், விளையாட்டு உபகரணங்கள் அல்லது இசைக்கருவிகளை எடுத்துச் செல்வது போன்ற விருப்பத் தெரிவுக்குரிய சேவைகளுக்கான அனைத்துக் கட்டணங்களும், அத்துடன் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பு விதிமுறைகளும், விமான நிறுவனங்களின் இணையதளங்களிலும் முன்பதிவுத் தளங்களிலும் தெளிவாகவும் குழப்பமின்றியும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் DGCA கோரியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |