உளவுத்துறை அனுப்பிய இரகசிய செய்தி... குவிக்கப்படும் பொலிசார்: பரபரப்படையும் அமெரிக்க தலைநகர்
உளவுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்று பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி சியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவைப் பொருத்தவரை, மரபுப்படி மார்ச் 4ஆம் திகதி என்பது மிகவும் முக்கியமான ஒரு நாள் ஆகும்.
மார்ச் 4 அன்றுதான் வழக்கமாக அமெரிக்க அதிபர் பதவியேற்றுக்கொள்வார். தற்போது அந்த வழக்கத்தை மாற்றி, ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்காவில் அதிபர் பதவியேற்றுக்கொள்கிறார்.
ஆனால், இன்னமும் வலது சாரியினரான ஒரு கூட்டத்தார் மார்ச் 4தான் அதிபர் பதவியேற்கும் நாள் என நம்பி வருகிறார்கள்.
அதிலும், ட்ரம்ப் ஆதரவாளர்களான ஒரு கூட்டத்தார், குறிப்பாக, ஜனவரி 6ஆம் திகதி தலைநகரில் வன்முறையில் இறங்கிய அதே கூட்டத்திலும் இந்த நம்பிக்கை கொண்டவர்கள் இருந்தார்கள்.
இப்போதும், மார்ச் 4ஆம் திகதிதான் அதிபர் பதவியேற்கும் நாள் என்றும், அன்று ட்ரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்றுக்கொள்வார் என்றும் கண்மூடித்தனமாக ஒரு கூட்டம் நம்பி வருகிறது.
இந்த கூட்டத்தார், மார்ச் 4 அன்று, அதாவது நாளையத்தினம் தலைநகரில் மீண்டும் நுழைய இருப்பதாக உளவுத்துறைக்கு ஒரு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. ஆகவே, தலைநகரில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
பொலிசாரின் விடுமுறை மற்றும் வார ஓய்வு ஆகியவை ரத்துசெய்யப்பட்டு, அனைவரும் பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
தலைநகரில் ஏற்கனவே 5,000 பொலிசார் பணியில் உள்ள நிலையில், உளவுத்துறை அளித்த தகவலைத் தொடர்ந்து மேலும் 4,900 தேசிய பாதுகாப்பு படையினர், மார்ச் 12 வரையிலாவது பணியில் இருக்கும் வண்ணம் அங்கு பணியமர்த்தப்பட இருக்கிறார்கள்.
ஏற்கனவே ஜனவர் 6ஆம் திகதி ட்ரம்ப் ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், இம்முறை என்ன நடக்குமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



