அமெரிக்காவில் யூத வழிபாட்டுத் தலம் மீது தாக்குதல் முயற்சி: குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்
அமெரிக்காவில் மிச்சிகன் யூத வழிபாட்டு தலத்தில் தாக்குதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூத வழிபாட்டுத்தலம் மீது தாக்குதல் முயற்சி
அமெரிக்காவின் டெட்ராய்ட்(Detroit) நகருக்கு அருகில் வெஸ்ட் ப்ளூம்ஃபீல்ட் டவுன்ஷிப்பில்(West Bloomfield Township) அமைந்துள்ள டெம்பிள் இஸ்ரேல் என்ற யூத வழிபாட்டுத்தலம் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மழலையர் பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு மையமாக செயல்பட்டு வரும் இந்த குறிப்பிட்ட இடத்தில் வாகன மோதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இந்த சம்பவத்தில் வாகனம் ஒன்று டெம்பிள் இஸ்ரேல் கட்டிடத்தின் மீது மோதி சேதப்படுத்தி இருப்பதுடன், இந்த சம்பவம் திட்டமிட்ட வாகன தாக்குதல் என உறுதி செய்யப்பட்டு இருப்பதாக FBI இயக்குனர் காஷ் படேல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் உயிரிழந்துவிட்டதாகவும் ஓக்லாண்ட் கவுண்டி ஷெரீப் அலுவலகம் மற்றும் சட்ட அமலாக்கத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
யாருக்கும் பாதிப்புகள் இல்லை

இந்த சம்பவத்தில் பொதுமக்களுக்கோ அல்லது அங்கு பணிபுரிந்த நபர்களுக்கோ எந்தவொரு காயங்களும் ஏற்படவில்லை என்று ஷெரீப் மைக்கேல் புச்சார்ட் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்யும் வரை அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் டெட்ராய்ட் யூத கூட்டமைப்பு உடனடியாக அப்பகுதியை சுற்றியுள்ள யூத நிறுவனங்களை உடனடியாக மூட அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL ல் இணையுங்கள். |