ஈழச்சொந்தங்களின் உயிர்க்காக்கும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்! சீமான் வலியுறுத்தல்
முகாம்களில் வாழும் ஈழச்சொந்தங்களிடம் கொரோனா நோய்த்தொற்று சோதனைகளைச் செய்வதோடு, தடுப்பூசி முகாம்கள் அமைத்து அவர்களது உயிர்க்காக்கும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள், தமிழக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு அனைத்துத் துயர்துடைப்பு உதவிகளும் கிடைக்க தமிழக அரசு வழிவகைச் செய்யவேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 110 அகதிகள் முகாம்களில் ஏறக்குறைய 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 68,௦00க்கும் மேற்பட்டவர்களும், முகாம்களுக்கு வெளியே ஏறக்குறைய 35,000க்கு மேற்பட்டவர்களும், சிறப்பு முகாம் எனப்படும் தடுப்பு முகாம்களில் கணிசமான எண்ணிக்கையிலுமென ஒரு இலட்சத்திற்கும் மேலான ஈழச்சொந்தங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான பேரிடர் கால உதவிகளை அரசு செய்யாதிருப்பது ஏமாற்றமளிக்கிறது.
ஈழத்தமிழர் முகாம்கள் போதிய இடவசதியின்றி நெருக்கடிமிக்கதாக இருப்பதாலும், சுகாதாரமற்ற முறையிலும், சரியான கழிப்பிட வசதிகளிலில்லாத நிலையிலும் அக்குடியிருப்புகள் அமைந்திருப்பதாலும் அங்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், தமிழக அரசு உடனடியாக முகாம்களின் சுகாதாரத்தை ஆய்வுசெய்து போதிய அடிப்படை வசதிகளை உருவாக்கித் தந்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் உடல்நலத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகிறது.
ஆகவே, அங்கு வாழும் ஈழச்சொந்தங்களிடம் கொரோனா நோய்த்தொற்று சோதனைகளைச் செய்வதோடு, தடுப்பூசி முகாம்கள் அமைத்து அவர்களது உயிர்க்காக்கும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டுமெனக் கோருகிறேன்.
தமிழக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால அனைத்துத் துயர்துடைப்பு உதவிகளும் கிடைக்க தமிழக அரசு வழிவகைச் செய்யவேண்டும்!https://t.co/Xj66Ggp7t1 pic.twitter.com/BGJMPO1i9r
— சீமான் (@SeemanOfficial) May 30, 2021
தமிழகச் சிறைகளிலுள்ள கைதிகளைக் கொரோனா நோய்த்தொற்றுப் பரவுலை தடுப்பதற்காகச் சொந்தப் பிணையில் விடுவிப்பது போல, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஈழத்தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க ஆவணம் செய்ய வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.