குடிநீரில் மலம் கலப்பு! தமிழகத்தை உலுக்கிய விவகாரத்தில் ஏன் கைது நடவடிக்கை எடுக்கல? சீமான் கண்டனம்
குடிநீர்த்தொட்டியில் மனித மலத்தை சாதி வெறியர்கள் கலந்த கொடுஞ்செயல் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில் அதில் தொடர்புடையவர்களை இன்னும் கைது செய்யாதது ஏன் என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சாதி வெறியின் உச்சத்தில் குடிக்கும் நீரில் மலத்தைக் கலந்தவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சியிலுள்ள இறையூர் கிராமத்தின் குடிநீர்த்தொட்டியில் மனித மலத்தை சாதிவெறியர்கள் கலந்த கொடுஞ்செயல் தொடர்பான செய்தி வெளியாகி, ஒரு வாரத்தைக் கடந்தும் இன்று வரை அதில் தொடர்புடைய குற்றவாளிகள் எவரையும் கைது செய்யாதிருக்கும் திமுக அரசின் செயல் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
கடும் கண்டனத்திற்குரியது.
சமூக நீதி ஆட்சியென நாள்தோறும் சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசு, தமிழ்நாட்டையே உலுக்கிய இக்கோரச்சம்பவத்தில் தொடர்புடைய சாதிவெறியர்களைக் கைது செய்யாது மெத்தெனப் போக்கோடு நடந்துகொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
இதுதான் பெரியார் வழியிலான விடியல் ஆட்சியா? இதுதான் சமத்துவத்தை நிலைநாட்டும் லட்சணமா? இதுதான் திமுகவின் சாதி ஒழிப்புச் செயல்பாடா?
அக்கொடும் நிகழ்வு நடைபெற்று ஒரு வாரமாகியும்கூட ஒரு அமைச்சர்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவும், துணைநிற்கவும் அக்கிராமத்திற்குச் செல்லாதது ஏன்? இதுதான் சமூக நீதியைப் பேணிக்காக்கும் அரும்பணியா? என தெரிவித்துள்ளார்.