இரக்கமற்ற படுகொலைகள்..ராமரின் மாடலா? கொந்தளித்த சீமான்
தமிழ்நாட்டில் நடைபெறுவது திமுக ஆட்சியின் திராவிட மாடலா அல்லது ராமரின் மாடலா என நாம் தமிழர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சி குறித்தும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறிய கருத்து குறித்து விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். சீமான் தனது அறிக்கையில் கூறுகையில், ''திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருவாய் மலர்ந்திருப்பது வியப்பை அளிக்கிறது.
இத்தனை காலமும் திராவிட ஆட்சி என்பது பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களின் வழிவந்தவர்கள் நடத்தும் ஆட்சி என அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, இல்லை நாங்கள் பகுத்தறிவு பகலவன் ராமசாமி வழிவந்தவர்கள் அல்ல; பகவான் ராமர் சாமியின் வழிவந்தவர்கள் என்று திமுக அரசின் மிக முக்கிய அமைச்சகப் பொறுப்பை வகிக்கும் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
திமுகவின் சட்ட அமைச்சரே கூறியிருப்பதால் அறியாமல், தெரியாமல் தவறுதலாக கூறிவிட்டார் என்று யாரும் மறுப்பதற்கில்லை. இதுவரை திமுக தலைமையும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதில் இருந்து அக்கருத்தை திமுக முழுமையாக ஏற்றுக்கொள்கிறது என்பதும் உறுதியாகிறது'' என்றார்.
மேலும் அவர், ''ராமரை கடவுளாக வணங்கும் மக்கள், ராமரின் ஆட்சி என்பது வறுமை - ஏழ்மை, பசி - பஞ்சமற்ற, கொலை - கொள்ளை வளச்சுரண்டல், வன்புணர்வு அற்ற தூய நல்லாட்சியை, சொர்க்கத்தில் வாழ்வதைப்போன்ற பொற்கால ஆட்சியைத் தந்தார் என்கின்றனர்.
அப்படி ஒரு ஆட்சிதான் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிறதா? பட்டப்பகலில் படுகொலை, மலிவு விலையில் அரசே விற்கும் மது, கொத்துக் கொத்தாக கள்ளச்சாராய மரணங்கள், கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை, குடிநீர் தொட்டியில் மலம், பொங்கல் புளியில் பல்லி, சத்துணவில் அழுகிய முட்டை, பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை சாதிய மோதல்கள் இதெல்லாம் தான் ராமரின் ஆட்சியா? அல்லது சம்பூகனைக் கொன்றது போல் திமுக ஆட்சியிலும் ஈவு இரக்கமற்ற படுகொலைகள் நடைபெறுவதால் இது ராமரின் ஆட்சியா?'' என விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |