பேரிழப்பு! ஈழ விடுதலையை இறுதிவரை உறுதியாக ஆதரித்து நின்ற பெருமகன் ஐயா தா.பா: சீமான் புகழாரம்
எழுத்து, பேச்சு, களம் என மூன்றிலும் 70 ஆண்டுகாலம் ஆளுமையோடு ஆளுகை செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் இழப்புத் தமிழ் அரசியல் உலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு என சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா தா. பாண்டியன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அவரது இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் பெருமக்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஈழ விடுதலையை இறுதிவரை உறுதியாக ஆதரித்து நின்ற பெருமகன் ஐயா தா.பா. ஆவார்.
இறப்பதற்கு முன் ராஜீவ் காந்தியோடு களத்தில் இருந்து காயமுற்ற அவர், அவ்வழக்கில் சிக்கிண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களின் விடுதலைக்காகக் குரல்கொடுத்தவர்.
எத்தகைய காலக்கட்டத்திலும் எந்த நெருக்கடித் தருணத்திலும் தனது உள்ளத்தில் பட்டதை நெஞ்சுரத்தோடு உரைக்கிற பேராண்மை கொண்டவராகத் திகழ்ந்தவர்.
எழுத்து, பேச்சு, களம் என மூன்றிலும் 70 ஆண்டுகாலம் ஆளுமையோடு ஆளுகை செலுத்திய ஐயா தா. பா.வின் இழப்புத் தமிழ் அரசியல் உலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம் https://t.co/52K2gvX4C6
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) February 26, 2021
எழுத்து, பேச்சு மட்டுமல்லாது களத்திலும் ஆளுமையோடு ஆளுகை செய்த ஐயா தா.பா அவர்களது இழப்பு ஒட்டுமொத்த தமிழக அரசியல் உலகிற்கும் ஏற்பட்ட பேரிழப்பென்றால், அது மிகையில்லை என சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.