உக்ரைனுக்கு பின்னர் புடினின் இலக்கு இந்த நாடு தான்: ரஷ்ய ஊடகத்தில் நேரலை விவாதம்
உக்ரைன் விவகாரத்திற்கு பின்னர் பால்டிக் நாடுகள் மீது விளாடிமிர் புடின் படையெடுப்பை முன்னெடுப்பார் என ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்றில் நடத்தப்பட்ட விவாதம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அரசாங்கத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரே, தொடர்புடைய விவாதத்தில் பங்கேற்று இது குறித்து விளக்கமளித்துள்ளார். புடினின் இராணுவமானது நேட்டோ நாடுகளான லாத்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியாவைக் கைப்பற்றும் எனவும், அத்துடன் நடுநிலையான ஸ்வீடனின் சில பகுதிகளையும் கைப்பற்றும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோவியத் ஒன்றியம் சின்னாபின்னமான பின்னர் மூன்று பால்டிக் நாடுகளும் நேட்டோவில் இணைந்தன, மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்தது போல, தங்கள் நாட்டையும் சீர்குலைத்து திடீரென்று ஒருநாள் படையெடுப்பை முன்னெடுக்கலாம் என்று தொடர்ந்து அஞ்சுகின்றனர்.
இந்த நிலையிலேயே ரஷ்ய செய்தி ஊடக நேரலையில் Colonel Igor Korotchenko என்பவர் உக்ரைன் படையெடுப்புக்கு பின்னர் விளாடிமிர் புடினின் இலக்கு அந்த மூன்று பால்டிக் நாடுகள் தான் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி முழு பால்டிக் கடல் பகுதியும் ரஷ்ய இராணுவத்தின் இலக்காக இருக்கும் எனவும், பால்டிக் பகுதியில் பாதுகாப்பு அளித்துவரும் கனடா, பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சிறப்பு படைகளை ரஷ்யாவால் எளிதாக வெல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படையெடுப்புக்கு பின்னர் புதிதாக உருவாகும் பால்டிக் அரசாங்கமானது ரஷ்ய அரசாங்கத்துடன் விசுவாசத்துடன் இருப்போம் என உறுதியளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், குறித்த செய்தி ஊடக விவாதமானது கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்போதே உக்ரைன் படையெடுப்பு தொடர்பில் விவாதிக்கப்பட்டதாகவும் வெளியான தகவல் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.