தாமாகவே வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கு உதவித்தொகை அளிக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு
ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு 1,000 டொலர் உதவித்தொகை மற்றும் பயணச் சலுகையை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சமீபத்திய முயற்சி
இது பெருமளவிலான நாடுகடத்தல்களை அதிகரிப்பதற்கும் அமலாக்கச் செலவுகளைக் குறைப்பதற்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் சமீபத்திய முயற்சி என்றே கூறப்படுகிறது.
CBP Home செயலியைப் பயன்படுத்தி சுயமாக நாட்டைவிட்டு வெளியேறும் புலம்பெயர் மக்கள், அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிவிட்டார்கள் என்பது சரிபார்க்கப்பட்டவுடன் உதவித்தொகையைப் பெறுவார்கள் என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
செலவு மிகுந்த கைது நடவடிக்கைகள் மற்றும் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு பதிலாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள மாற்றாக இருக்கும் என்றே அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியிருக்கும் மக்களுக்கு சுயமாகவே வெளியேறும் இந்த திட்டம் பாதுகாப்பானதாக இருக்கும் என்றே உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
CBP Home செயலியானது ஜோ பைடன் ஆட்சியின் போது புலம்பெயர் மக்களை விசாரித்து, அவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது புலம்பெயர் மக்களை நாட்டை விட்டு வெளியேற்ற அந்த CBP Home செயலியை பயன்படுத்தி வருகிறார்.
அரசாங்கம் செலவிடும் தொகை
ஆனால், 1000 டொலர் உதவித்தொகை அளிக்கும் இந்த திட்டமானது எந்தவகையில் வலுவானது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக குடியிருக்கும் ஒருவரை அடையாளம் கண்டு, கைது செய்து, அவரை காவலில் வைத்திருந்து, நாடுகடத்தப்படும் வரையில் அரசாங்கம் செலவிடும் தொகை 17,000 டொலர் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனாலையே, சுயமாக வெளியேறும் ஒருவருக்கு 1000 டொலர் உதவித்தொகை அளிக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை உரிய அதிகாரிகளால் 66,000 புலம்பெயர் மக்கள் கைதாகியுள்ளனர். அதில் 65,600 பேர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |