கடும் புழுதிப் புயலில் சிக்கிய நாடு... ஸ்தம்பித்த 7 மாகாணங்கள்: 13 மில்லியன் மக்கள் பாதிப்பு
அண்டை நாடான ஈராக்கில் இருந்து புழுதிப் புயல் வீசியதால், ஈரானிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஏழு மேற்கு மாகாணங்களில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களை மூட உத்தரவிட்டனர்.
வெளியே நடமாடவும் தடை
கடும் புழுதிப் புயல் காரணமாக 13 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெளியே நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜெஸ்தான், கெர்மன்ஷா, இலம் மற்றும் குர்திஸ்தான் மாகாணங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கெர்மன்ஷா மற்றும் இலம், தென்மேற்கில் உள்ள குஜெஸ்தான் உள்ளிட்ட பல மாகாணங்களிலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் மூடப்பட்டன. வடகிழக்கில் சஞ்சன் மற்றும் தெற்கில் புஷேர் ஆகிய பகுதிகளும் புழுதிப் புயலால் பாதிக்கப்பட்டன.
தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே கிட்டத்தட்ட 1,100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள புஷேருக்கு செவ்வாயன்று காற்று தரக் குறியீடு 108 என பதிவாகியுள்ளது, இது உணர்திறன் மிக்க மக்களுக்கு மோசமானது என்று மதிப்பிடப்பட்டது.
அந்த குறியீடானது உலக சுகாதார அமைப்பால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகக் கருதப்படும் காற்று நுண் துகள்களின் செறிவை விட நான்கு மடங்கு அதிகம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகள்
ஈராக்கில் இருந்து மேற்கு ஈரானை நோக்கி ஒரு பெரிய புழுதிப் புயல் நகர்வதால் இந்த நிலைமைகள் ஏற்பட்டதாக ஈரானின் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில பகுதிகளில் குறைவான வெளிச்சம் இருப்பதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்தது, மேலும் குடியிருப்பாளர்கள் உள்ளேயே இருக்கவும், வெளியே செல்ல வேண்டியிருந்தால் முகமூடிகளை அணியவும் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த மாதம், ஈராக்கில் இதேபோன்ற புழுதிப் புயல் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், சுவாசப் பிரச்சினைகளால் ஆயிரக்கணக்கான மக்களை மருத்துவமனையை நாடும் நிலை ஏற்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |