வெனிசுலாவில் இருந்து கைப்பற்றப்பட்ட கச்சா எண்ணெய்... விற்க முடிவு செய்த ட்ரம்ப்
வெனிசுலாவில் இருந்து அமெரிக்கா கைப்பற்றிய கப்பல்களில் உள்ள கச்சா எண்ணெய் மற்றும் அந்தக் கப்பல்களை விற்றுவிட இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
நாங்கள் அதை விற்கலாம்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைவர் நிக்கோலஸ் மதுரோ பதவியில் இருந்து விலக வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலேயே, கச்சா எண்ணெய் கப்பல் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பின் கருத்து வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ட்ரம்ப் தெரிவிக்கையில், அந்த எண்ணெயை நாங்கள் வைத்துக்கொள்ளப் போகிறோம், ஒருவேளை நாங்கள் அதை விற்கலாம், ஒருவேளை வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை அதை முக்கியமானகட்டத்தில் பயன்படுத்தலாம். அந்தக் கப்பல்களையும் எங்களிடமே வைத்துக்கொள்ள இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலா தனது எண்ணெய் வருவாயை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்துவதாக ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால், மூன்று கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதை, வெனிசுலா கடற்கொள்ளை என்றே அடையாளப்படுத்தியுள்ளது.

புத்திசாலித்தனமாக இருக்கும்
எண்ணெய் கப்பல்களைக் கைப்பற்றுவதம் நோக்கம் மதுரோவை அதிகாரத்திலிருந்து நீக்குவதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அநேகமாக அது நடக்கும் என்று நான் நினைக்கிறேன்... அவர் என்ன செய்ய வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அவர் அப்படிச் செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், மீண்டும் சொல்கிறேன், அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்கா பசிபிக் மற்றும் கரீபியன் கடல்களில் தனது இராணுவ இருப்பை அதிகரித்து வருகிறது. மேலும், வெனிசுலாவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளது, இதில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, வெனிசுலா அரசாங்கம் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிக்க எண்ணெய் ஏற்றுமதியை பெருமளவில் நம்பியிருப்பதால், இந்த சமீபத்திய நடவடிக்கைகள் அதிகாரிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |