எண்ணெய் ஏற்றுமதி தொடர்பில் உலக நாடுகளுக்கு மீண்டும் வரி அச்சுறுத்தல் விடுத்த ட்ரம்ப்
வெனிசுலாவை அடுத்து கியூபாவிற்கு கடும் நெருக்கடி அளித்துவரும் டொனால்ட் ட்ரம்ப், அந்த நாட்டிற்கு எண்ணெய் வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தியுள்ளார்.
வரி விகிதங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழனன்று ஒரு தேசிய அவசரநிலையை அறிவித்து, கியூபாவிற்கு எண்ணெய் விற்கும் அல்லது வேறு வழிகளில் வழங்கும் நாடுகளின் மீது வரிகளை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

கியூபாவின் முதன்மை எண்ணெய் விநியோகஸ்தராக உள்ள மெக்சிகோ; 2025-ல் கியூபாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 44 சதவீதத்தை வழங்கியுள்ளது.
ட்ரம்பின் நிர்வாக உத்தரவில் எந்த வரி விகிதங்களையும் குறிப்பிடவில்லை அல்லது எந்த நாடுகளையும் சுட்டிக்காட்டவில்லை என்றாலும், கியூபாவுடனான உறவுகளை துண்டிக்குமாறு ட்ரம்ப் மெக்சிகோவை வலியுறுத்தி வருகிறார்.
வரலாற்று ரீதியாக வெனிசுலாவும் ரஷ்யாவும் கியூபாவிற்கு எண்ணெய் வழங்கி வந்துள்ளன, ஆனால் அந்த நாடுகள் ஏற்கனவே விரிவான தடைகள் மற்றும் வரிகளுக்கு உட்பட்டுள்ளன.
வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னர், கியூபாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
ட்ரம்பின் அழுத்தம் காரணமாக வெனிசுலா சமீபத்தில் அந்த நாட்டிற்குப் பணம் மற்றும் எண்ணெய் ஆதரவை நிறுத்தியதைத் தொடர்ந்து, கியூபா விரைவில் வீழ்ச்சியடையும் என்று ட்ரம்ப் இந்த வாரம் குறிப்பிட்டார்.

இதனிடையே, மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாமுடன் வியாழக்கிழமை அன்று ஒரு ஆக்கப்பூர்வமான தொலைபேசி உரையாடலை நடத்தியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பும் ஷெயின்பாமுவும் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்துப் பேசியதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அச்சுறுத்தல்
ஆனால் வரி அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டதா என்பது தொடர்பானத் தகவல் இல்லை. வெனிசுலாவிலிருந்து கியூபாவிற்கு எண்ணெய் மற்றும் பணம் செல்வதை நிறுத்துவதாக ட்ரம்ப் சபதம் செய்ததைத் தொடர்ந்து, மெக்சிகோவிலிருந்து வரும் எண்ணெய் ஏற்றுமதிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
வெளியான தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் மெக்சிகோவின் அரசு எண்ணெய் நிறுவனமான Pemex நாளுக்கு 20,000 பீப்பாய் எண்ணெயை கியூபாவிற்கு அனுப்பியுள்ளது.

ஆனால் தற்போது அமெரிக்க அச்சுறுத்தல் காரணமாக அந்த எண்ணிக்கை நாளுக்கு 7,000 பீப்பாய் என சரிவடைந்துள்ளது. இந்த வாரம், கியூபாவிற்கு எண்ணெய் வழங்குவது தொடர்பான முடிவுகளை ஷெயின்பாம் ஒரு இறையாண்மை விஷயம் என்று குறிப்பிட்டார்.
மேலும், அந்தத் தீவுக்குத் திட்டமிடப்பட்ட சில எண்ணெய் ஏற்றுமதிகளை மெக்சிகோ நிறுத்திவிட்டதையும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இந்தத் தற்காலிக நிறுத்தம், எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் ஒரு பகுதி என்றும், இருப்பினும், மெக்சிகோ தொடர்ந்து கியூபாவிற்கு எண்ணெய் வடிவில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்றும் ஷெயின்பாம் குறிப்பிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |