தவெகவின் சின்னம் எனக்கு தெரியும் - சஸ்பென்ஸ் வைக்கும் செங்கோட்டையன்
தவெகவின் சின்னத்தை பார்த்து நாடே வியக்க போகிறது என செங்கோட்டையன் பேசியுள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என களத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது.
234 தொகுதிகளிலும் வழக்கம் போல் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி, 2024 நாடாளுமன்ற தேர்தலில் 8.22% வாக்குகள் பெற்று, மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றதால் அதன் விவசாய சின்னம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்முதலாக தேர்தலை சந்திக்க உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் என்ன என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தவெக சார்பில் கடந்த மாதம் தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கோரி விண்ணப்பிக்கப்பட்டு, தற்போது பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தவெகவின் சின்னம் எனக்கு தெரியும் என அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக சின்னம்
நேற்று ஈரோட்டில் மக்களை சந்தித்து பேசிய அவர், "தற்போது சிறுவர்கள் கூட தங்களது பெற்றோர்களிடம் தவெகவிற்கு வாக்களிக்குமாறு கூறி வருகிறார்கள்.
ஆண்ட கட்சிகளே தான் ஆள வேண்டுமா? மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாதா? ஏன் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாது? நல்லாட்சியை கொடுக்கக் கூடிய புதிய முகத்தை மக்கள் தேடிக் கொண்டே இருந்தார்கள். அந்த முகம் கிடைத்துவிட்டது.

நமக்கு விரைவில் சின்னம் கிடைக்க உள்ளது. அது என்ன சின்னம் என்பது எனக்கு தெரியும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியே சொல்லக்கூடாது.
அந்த சின்னத்தை பார்த்து நாடே பயப்பட போகிறது. நாடே வியக்க போகிறது. ஏனென்றால் இனி இந்த சின்னத்தை வெல்வதற்கு தமிழகத்தில் எந்த இயக்கமும் இல்லை" என கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |