முதல்வரின் கோரிக்கை ஏற்பு! ஆனாலும்... - ஆளுநர் சொன்னது என்ன?
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு மாற்றுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நடந்த சோதனையின் முடிவில் நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே சிகிச்சைக்காக ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து தற்போது காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை குழு விரைந்துள்ளது.
இதற்கிடையே செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றக்கோரி நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை நிராகரித்து அனுப்பிய ஆளுநரின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு மாற்ற முதல்வர் அனுப்பிய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.